முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் பால விபத்து: ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகள் இரங்கல்

திங்கட்கிழமை, 31 அக்டோபர் 2022      இந்தியா
Putin 2022-10-31

Source: provided

புதுடெல்லி : குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்த 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் 8 மாத கால பராமரிப்பு பணிக்கு பின்பு, கடந்த 26-ந் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.

ஆனால், 5 நாட்களில் பாலம் இடிந்து விழுந்து பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. பால விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 177 பேர் மீட்கப்பட்டும் உள்ளனர். சிலர் சிகிச்சையில் உள்ளனர். தொடர்ந்து மீட்பு, நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.

இந்த துயர சம்பவத்திற்கு உலக நாடுகளில் இருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இதுபற்றி ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில், குஜராத்தில் பால விபத்தின் தொடர்ச்சியாக ஏற்பட்ட சோக சம்பவத்திற்கான ஆழ்ந்த இரங்கல்களை,  இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஏற்று கொள்ள வேண்டும்.

எதிர்பாராது நடந்த இந்த பேரழிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரக்கத்தின் வார்த்தைகளையும், ஆதரவையும் தெரிவியுங்கள். காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவாக குணமடைந்து திரும்ப வேண்டி கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, இந்தியாவில் உள்ள ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ்வும் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டு உள்ளார்.

நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபாவும் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டு உள்ளார். இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் அலெக்ஸ் எல்லிஸ் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், குஜராத்தில் இருந்து வந்த தகவல் அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்து உள்ளார்.

சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சகமும், நட்பு நாடான இந்திய குடியரசுக்கு இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்து உள்ளது. இதேபோன்று, இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் சார்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

போலந்து நாட்டின் வெளிவிவகார மந்திரி பிக்நியூ ராவும் தனது இரங்கல் செய்தியில், இந்தியா மற்றும் போலந்து நாட்டின் நட்புறவில் இந்த நகரம் சிறந்த இடம் வகிக்க கூடியது. குஜராத் சோக சம்பவத்திற்காக இந்திய தேசத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் உள்ள சிங்கப்பூர் தூதர் சைமன் வாங், ஐ.நா. பொது சபையின் 77-வது கூட்டத்தொடரின் தலைவர் சபா கொரோசி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து