முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் தொங்கு பால விபத்து: பலி எண்ணிக்கை 142 ஆக அதிகரிப்பு : சம்பவ இடத்தை இன்று பார்வையிடுகிறார் பிரதமர் மோடி

திங்கட்கிழமை, 31 அக்டோபர் 2022      இந்தியா
modi-2022-09-01

Source: provided

ஆமதாபாத் : குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்கு பாலம் உடைந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது. 177 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி இன்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிடுகிறார்.

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த பாலம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. சிதிலம் அடைந்த அந்த பாலத்தை சீரமைக்கும் பணி கடந்த 6 மாதங்களாக நடந்து வந்தது. பணிகள் அனைத்தும் முடிவடைந்ததையடுத்து, மக்களின் பயன்பாட்டுக்காக குஜராத்தி புத்தாண்டு தினமான கடந்த 26-ந் தேதி பாலம் திறந்துவைக்கப்பட்டது.

இந்தநிலையில், விடுமுறை நாளான நேற்று முன்தினம் மாலை 6.30 மணி அளவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த பாலத்தின் மீது குவிந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது அவர்களின் எடையை தாங்க முடியாமல், பாலம் திடீரென அறுந்து விழுந்தது. இதையடுத்து, பாலத்தில் நின்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றுக்குள் விழுந்தனர்.

தகவல் அறிந்து தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்களும், மாநில பேரிடர் மீட்புப்படையினரும் உடனடியாக விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆற்றுக்குள் விழுந்தவர்களில் பலர் நீரில் மூழ்கி இறந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் என்று தெரிகிறது. நீரில் மூழ்கிய மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று அதிகாலை நிலவரப்படி, பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளதாக குஜராத் தகவல் துறை தெரிவித்தது. மேலும், இதுவரை விபத்தில் சிக்கிய 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் சிக்கியவர்களை தேடுதல் மற்றும் மீட்கும் பணியில், ராணுவம், கடற்படை, விமானப்படை, என்.டி.ஆர்.எப், தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மீட்பு பணி இன்னும் நடந்து வருகிறது. மீட்பு பணியை துரிதப்படுத்த, நேற்று அதிகாலை 3 மணிக்கு ராணுவ வீரர்கள் குழு, சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக என்று குஜராத் தகவல் துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அகமதாபாத்தில் நேற்று நடைபெறவிருந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக பேரணி ரத்து செய்யப்பட்டது.

பிரதமர் மோடி, ‘உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், ‘உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து