முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் தொங்கு பால விபத்து: கேபிள்களை மாற்றாமல் பெயிண்ட் மட்டும் அடிக்கப்பட்டது அம்பலம்

புதன்கிழமை, 2 நவம்பர் 2022      இந்தியா
Gujarat-Bridge 2022-10-31

குஜராத்தில் அறுந்துவிழுந்த பாலத்தின் கம்பிவடங்கள் (கேபிள்கள்) மாற்றப்படவில்லை எனவும், பெயிண்ட் மட்டுமே அடிக்கப்பட்டு, பாலிஷ் செய்யப்பட்டதாகவும்  அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் மச்சு ஆற்றின் மீது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை அதிக எடை காரணமாக அறுந்து விழுந்தது. அப்போது பாலத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோர் ஆற்றில் விழுந்ததில், 142 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்துக்கு முக்கிய காரணமாகக் கருதப்படும் பாலச் சீரமைப்பு ஒப்பந்ததாரரான ஒரேவா நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் உள்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்து மோர்பி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, புனரமைப்பு பணிக்கு டிசம்பர் மாதம் வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்ட காலத்துக்கு முன்பே, பாதுகாப்பு சான்றிதழ்கள் எதையும் பெறாமல் இந்த பாலத்தைத் திறந்திருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

மேலும், பாலம் புனரமைப்பு பணிக்காக ஒரேவா நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட இரண்டு பொறியாளர்களும் தகுதி வாய்ந்தவர்கள் இல்லை என்றும் பாலத்தின் கேபிள்களை மாற்றாமல், கேபிளுக்கு எண்ணெய், கிரீஸ்கூட போடாமல் பெயிண்ட் அடித்து, பாலிஷ் மட்டுமே செய்து பாலத்தை திறந்துள்ளதாகவும் காவல்துறை மற்றும் அரசு வழக்கறிஞர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எச்.எஸ். பஞ்சால் கூறுகையில், “மரத்தாலான பாலத் தளத்தை அலுமினியத் தளமாக மாற்றியதால், அதிக எடையைத் தாங்காமல் பாலம் உடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

காவல்துறை தரப்பில் விசாரணை அதிகாரியான துணை காவல் கண்காணிப்பாளர் பி.ஏ. சாலா, "ஒப்பந்ததாரர்களின் பொறியாளர்கள் இருவரும் தகுதியான பொறியாளர்கள் இல்லை. தவிர, ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், காப்பாற்றுவதற்கான உயிர்காக்கும் சாதனங்களும் அங்கே இல்லை” என்று நீதிமன்றத்தில் கூறினார்.

தொடர்ந்து, பொறியாளர்கள் இருவர் உள்பட 4 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், பாலத்தின் காவலர், நுழைவுக் கட்டணம் வசூலிப்பவர் உள்பட 5 ஊழியர்களை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. கடந்த 8 மாதங்களாக புனரமைப்பு பணிகளுக்கான மூடப்பட்டிருந்த இந்த பாலத்தை தகுதிச் சான்று பெறாமல் புனரமைப்பு காலம் முடிவடைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே, தீபாவளி மற்றும் குஜராத் தினத்தை முன்னிட்டு அக்டோபர் 26 ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. 

திறப்பு விழாவில் பேசிய ஒரேவா குழுமத்தின் உரிமையாளர், இந்த பாலத்தை புனரமைக்க ரூ. 2 கோடி செலவிடப்பட்டதாகவும், அடுத்த 15 ஆண்டுகள் பாதுகாப்பாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். போலீஸ் காவலில் உள்ள ஒரேவா நிறுவனத்தின் அதிகாரிகள், பாலத்தில் மேற்கொண்ட புனரமைப்பு பணிகள் குறித்து வாக்குமூலங்கள் அளிக்கும்போது மேலும் பல உண்மைகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து