முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல்: 5 இந்திய-அமெரிக்கர்கள் போட்டி

திங்கட்கிழமை, 7 நவம்பர் 2022      உலகம்
US-Election 2022-11-07

அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் 5 இந்திய-அமெரிக்கர்கள் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவைக்கான தேர்தல் நாளை (8-ம் தேதி) நடைபெறவுள்ளது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலில் 5 இந்திய-அமெரிக்கர்களும் போட்டியிடுகின்றனர். அவர்களில் அமி பெரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கன்னா, பிரமீளா ஜெயபால் ஆகியோர் ஏற்கெனவே அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அவர்கள் தற்போதைய தேர்தலில் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

அவர்களுடன் தொழிலதிபரான ஸ்ரீ தனேதரும் தேர்தலில் போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிடும் 5 இந்திய-அமெரிக்கர்களும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். தேர்தலில் போட்டியிடும் இந்திய-அமெரிக்கர்களில் பொதுவாழ்வில் மூத்தவரான அமி பெரா, கலிஃபோர்னியாவில் போட்டியிடுகிறார். அவர் ஏற்கெனவே 5 முறை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தற்போது 6-ஆவது முறையாக அவர் போட்டியிடுகிறார்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனர். அவர்களது எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதால், தேர்தலில் அவர்களது ஆதரவைப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஜனநாயகக் கட்சியினரும் குடியரசு கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களை ஈர்ப்பதற்காகப் பல்வேறு பிரசாரக் கூட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் அக்கட்சிகள் நடத்தி வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து