முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியை நம்பி வருகிறவர்களை நிச்சயம் கைதூக்கி விடுவோம்: முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2022      அரசியல்
Selur-Raju 2022-11-18

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியை நம்பி வருகிறவர்களை நிச்சயம் கைதூக்கி விடுவோம் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட தாராபட்டி நிலையூர் கால்வாய் குறுக்கு புதிய பாலத்தினை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர் தாராப்பட்டி மக்கள் பயன்பெறும் வகையில் பயணிகள் நிழற்குடையினையும் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஜெயந்தி ராஜு, வில்லாபுரம் ஜெ.ராஜா, எம்.எஸ்.பாண்டியன், ஆர்.அண்ணாத்துரை, பா.குமார், பரவைராஜா,கு.திரவியம், ஜெ.மாணிக்கம், கணேஷ்பிரபு, சோலைராஜா, நீதிகாந்த், அஜய்,பைக்காரா செழியன்,ராமசுப்பு மற்றும் தாராப்பட்டி அ.தி.மு.க.நிர்வாகிகள் உள்ளனர்.

பின்னர் மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது தமிழக அரசின் மீது மக்களுக்கு திருப்தி இல்லை. அதை வெளிப்படுத்தும் விதமாகவே நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூட்டுறவு துறையின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என பேசி வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு, அ.தி.மு.க. எனும் எக்ஸ்பிரஸ் டெல்லிக்கு புறப்பட்டு விட்டது. அதில் ஏறுகிறவர்கள் டெல்லிக்கு செல்லலாம். கூட்டணிக்கு எப்போதும் அதிமுக தான் தலைமை ஏற்கும். அதிமுக கூட்டணியை நம்பி வருகிறவர்களை நிச்சயம் கைதூக்கி விடுவோம். பா.ஜ.க. வளர்ந்து விட்டதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு,அமைச்சர் துரைமுருகன் பயந்து விட்டார் என நினைக்கிறேன். அவரிடம் ஏற்கனவே ரெய்டு நடந்துள்ளது. துறை ரீதியான சில புகார்களும் உள்ளன. எனவே அவர் அப்படி சொல்லி இருக்கலாம்.அ.தி.மு.க.வை பொறுத்த வரை தமிழ்நாடு திராவிட பூமி. இங்கு திராவிட இயக்கம் மட்டும் தான் ஆட்சி அமைக்க முடியும்.

தி.மு.க.வை எதிர்க்க ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் சேர வேண்டும் என்ற டிடிவி தினகரனின் கருத்து குறித்த கேள்விக்கு,ஜெயலலிதாவின் தொண்டர்கள் எல்லோரும் இப்போது ஒன்றாக தான் உள்ளோம். அ.தி.மு.க.வில் பிளவு ஏற்படுவதும் பின்பு மீண்டும் பிரிந்தவர்கள் இணைவதும் வழக்கம் தான்.எனவே பிரிந்து சென்றவர்கள் உரிய நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க வேண்டும். அப்போது தான் விடிவுகாலம் கிடைக்கும். எதிர்காலத்தில் எதுவும் எப்படியும் மாறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து