முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வியைப்போல் வேலையிலும் புதுச்சேரி ஜிப்மரில் தனி இட ஒதுக்கீடு கோரி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

திங்கட்கிழமை, 21 நவம்பர் 2022      அரசியல்
ADMK 2022 11 21

கல்விக்கு தருவதுபோல் அனைத்து வேலையிலும் புதுச்சேரிக்கு ஜிப்மரில் தனி இட ஒதுக்கீடு தரக் கோரி அ.தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் ஜிப்மர் நிர்வாகத்தில் வேலை வாய்ப்பில் புதுவை மாநிலத்திற்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மாநிலச் செயலாளர் அன்பழகன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்தில் ஏராளமான அ.தி.மு.க.வினர், நிர்வாகிகள் பங்கேற்றனர். புதுச்சேரி ஜிப்மர் எதிரே வாகனத்தில் மேடை அமைத்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் இட ஒதுக்கீடு கோரி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பேசுகையில், "மருத்துவக் கல்வியில் புதுச்சேரிக்கு இட ஒதுக்கீடு வழங்கும் ஜிப்பர் நிர்வாகம், வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதில்லை. தற்போது 433 பணியிடங்களுக்கு அகில இந்திய அளவில் செவிலியர் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்திய அளவில் தேர்வு நடத்தப்படுவதால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில செவிலியர் படித்த மாணவிகள் போட்டியிடும் நிலை ஏற்படுவதால் புதுச்சேரி மாநிலத்தில் செவிலியர் படிப்பு படித்தவர்களுக்கு ஜிப்மரில் வேலை வாய்ப்பு தடுக்கப்படுகிறது.

மருத்துவக் கல்வியில் 26.5 சதவீதம் புதுவைக்கு இட ஒதுக்கீடு வழங்குவது போன்று வேலை வாய்ப்பிலும் 26.5 சதவீதம் இடங்கள் வழங்கினால் நம் மாநிலம் சார்ந்த சுமார் 115 செவிலியர் படிப்பு படித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்கும். குருப்-டி பிரிவில் பணி புரியும் ஒப்பந்த பணியாளர்களுக்குக் கூட வட மாநிலத்தை சேர்ந்தவர்களை நியமிக்கும் சூழ்நிலை உள்ளது.

தமிழ் மொழி பேசும் புதுவையில் உள்ள மருத்துவமனையில் செவிலியர் பணிக்குக் கூட வேறு மொழி பேசுபவர்களை பணியில் அமர்த்துவதால் தமிழ் பேசும் புதுவை, தமிழக மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆர்ப்பாட்டத்தின் மூலம் அரசின் கவனத்திற்கு நம் மாநில மக்களின் நலனுக்காக கொண்டு வந்துள்ளோம். மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தி நம் மாநிலத்திற்கு ஜிப்மர் வேலை வாய்ப்பில் குறைந்தது 25 சதவீத இட ஒதுக்கீட்டை அனைத்து வேலை வாய்ப்புகளிலும் பெற்றுத் தர உரிய நடவடிக்கையை முதல்வரும், ஆளுநரும் எடுக்க வேண்டும்.

அதுவரை புதுவை மாநிலத்திற்கு தனி இட ஒதுக்கீடு இல்லாமல் தற்போது நடைபெறும் செவிலியர் பணி நியமனத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஜிப்மர் நிர்வாகத்தின் சீர்கேடு சரி செய்யப்படவில்லை என்றால் கட்சித் தலைமையான எடப்பாடி பழனிசாமி அனுமதியோடு அடுத்தக் கட்ட நடவடிக்கையை அ.தி.மு.க. முன்னெடுக்கும்" என்று குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து