முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெயருக்குப் பின்னால் பட்டம் இருப்பது கவுரவம் மட்டுமல்ல, அடிப்படை உரிமை: கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2022      தமிழகம்
CM-2 2022 11 22

பெயருக்குப் பின்னால் பட்டம் இருப்பது கவுரவம் மட்டுமல்ல, அது உங்கள் அடிப்படை உரிமை என்று சென்னை இராணி மேரி கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். 

சென்னை இராணி மேரி கல்லூரியின் 104-வது பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக முதல்வர் மு.க. ஸ்டாலின்  கலந்து கொண்டு பேசியதாவது, 

பட்டம் பெறும் நாள் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மிக முக்கியமான நாள். அதிலும் முதல் பட்டம் சிறப்பானது. முதல் தலைமுறையாகப் பட்டம் பெறுவது அதனைக் காட்டிலும் பரவசமானது. உங்களது பட்டங்கள் உங்களை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்லும். நீங்கள் பெற்ற அறிவு, உங்களை மேலும் மேலும் உயர்த்தட்டும். நீங்கள் பெற்ற தன்னம்பிக்கை, உங்களை தலைநிமிர வாழ வைக்கட்டும். கல்லூரியில் இருந்து விடை பெறுகிறீர்களே தவிர, கற்பதில் இருந்து நீங்கள் விடைபெறவில்லை. பாடங்களைப் படிப்பவர்களாக மட்டுமல்ல, பாடங்களை உருவாக்கக்கூடிய அளவிற்கு நீங்கள் உயர வேண்டும்.  யார் எதைச் சொன்னாலும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், பகுத்தறிவோடு கேள்வி கேட்கும், விமர்சிக்கும் அறிவியல் மனப்பான்மையை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் பெற்ற பட்டம் முழுமை பெறும். நாமும் கல்லூரியில் படித்திருக்கிறோம்.  ஒரு பட்டம் வாங்கி இருக்கிறோம் என்று இல்லாமல் வாங்கிய பட்டத்தில் உயர்நிலை எதுவோ அதையும் முயன்று நீங்கள் அடைய வேண்டும். அதன் மூலமாக உச்சமான தகுதியை நீங்கள் பெற வேண்டும். அந்தத் தகுதியின் மூலமாக இன்னும் பலரையும் நீங்கள் வளர்த்தெடுக்க வேண்டும். இன்று பெறும் பட்டம் என்பது முடிவல்ல, தொடக்கம் என்பதை மறக்காதீர்கள். 

கடந்த மே 25-ம் நாளன்று இந்த இராணி மேரி கல்லூரியில் நடந்த மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழா மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்குகிற விழாவில் நான் கலந்து கொண்டேன்.  நான் மட்டும் முதல்வன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதாது, நீங்கள், ஒவ்வொருவரும் நான் முதல்வன், நான் முதல்வன் என்று சொல்லக்கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்காகத்தான் அந்தத் திட்டத்தையும் தொடங்கி இருக்கிறோம். வேலைக்கான ஆட்களை உருவாக்கத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கி வருகிறோம். இதனை இன்றைய இளைய தலைமுறை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இராணி மேரிக் கல்லூரியை பற்றி பெருமையாக சொல்ல வேண்டுமென்றால், பெண்குலத்திற்கு ஒளிவிளக்கு  என்றுதான் சொல்லவேண்டும்.  இந்தக் கல்லூரிக்கு முன்னால், கடற்கரைப் பகுதியில் கலங்கரை விளக்கு இருக்கிறது. 

இது பெண் கல்வியின் கலங்கரை விளக்காக இந்த இராணி மேரி கல்லூரி ஒளிவீசிக் கொண்டிருப்பதை நினைவுபடுத்துவது போல் அமைந்திருக்கிறது. இக்கல்லூரியினுடைய 104-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உங்களுக்கு பட்டங்களை வழங்குவது எனக்குக் கிடைத்த பெருமை. பட்டம் பெற்றுள்ள 21 துறைகளைச் சேர்ந்த 3,259 மாணவியர்களில் பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறைப் பட்டதாரிகள் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. உங்களது பெயருக்குப் பின்னால் பட்டம் இருப்பது கெளவரம் மட்டுமல்ல, அது உங்கள் அடிப்படை உரிமை.  இந்தக் கல்லூரியிலேயே தங்கி படிப்பதற்கு வசதியாக விடுதி ஒன்றை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது கல்லூரி நிர்வாகத்தின் கோரிக்கையாக இருப்பதாக அறிந்தேன். எனவே, மாணவியர்கள் தங்கிப் பயில ஏதுவாக கல்லூரி வளாகத்திற்குள்ளேயே விடுதி கட்டித் தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து