முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 671.80 கோடியில் 75 முடிவுற்ற திட்டப் பணிகள் திறப்பு: 4 புதிய அலுவலக கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்

செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2022      தமிழகம்
CM-3 2022 11 22

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்,  சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், பேரூராட்சிகள் ஆணையரகம்,  நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் சார்பில் 671 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 75 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், ரூ. 14 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள 4 நகராட்சி அலுவலகக் கட்டிடங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். 

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியத்தைச் சார்ந்த சிகரலப்பள்ளி மற்றும் 143 குடியிருப்புக்களுக்கு ரூ.31.82 கோடி மதிப்பீட்டிலான  கூட்டுக் குடிநீர்த் திட்டம் மற்றும் கிருஷ்ணகிரி ஒன்றியத்திலுள்ள வெலகலஹள்ளி மற்றும் 39 குடியிருப்புகளுக்கு ரூ.9.90 கோடி மதிப்பீட்டிலான  கூட்டுக் குடிநீர்த் திட்டம், 

திண்டுக்கல் மாவட்டம், பாலசமுத்திரம் பேரூராட்சிக்கு ரூ. 9.62 கோடி மதிப்பீட்டிலான   குடிநீர் அபிவிருத்தி திட்டம், கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியத்திலுள்ள 5 கிராம ஊராட்சிகளில் உள்ள 17 குடியிருப்புகளுக்கும், அண்ணாகிராமம் ஒன்றியத்திலுள்ள 4 கிராம ஊராட்சிகளில்  உள்ள 18 குடியிருப்புகளுக்கும் ரூ.9.21 கோடி மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம்,

மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள ஆனையூர் பகுதிக்கு ரூ.8.97  கோடி மதிப்பீட்டிலான  குடிநீர் அபிவிருத்தி திட்டம், தேனி மாவட்டம், மேலசொக்கநாதபுரம் பேருராட்சிக்கு ரூ.41.72 கோடி மதிப்பீட்டிலான பாதாள சாக்கடைத் திட்டம்என மொத்தம் ரூ.111 கோடியே 24 இலட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் 6 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் திறந்து வைத்தார். 

மேலும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் மொத்தம் ரூ. 398.51 கோடி மதிப்பீட்டில் 18 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் திறந்து வைத்தார். மேலும் ரூ. 109.56 கோடி மதிப்பீட்டில் 12 முடிவுற்ற நகராட்சி நிர்வாகத் துறை திட்டப் பணிகளை முதல்வர்  திறந்து வைத்தார். அதை தொடர்ந்து ரூ. 49.49 கோடியில் 38 முடிவுற்ற பெருநகர சென்னை மாநகராட்சி பணிகளை முதல்வர்  திறந்து வைத்தார். 

அதை தொடர்ந்து ரூ. 14 கோடியில் கட்டப்படவுள்ள 4 நகராட்சி அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மொத்தம் 685 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 75 முடிவுற்ற திட்டப் பணிகளையும் முதல்வர் திறந்து வைத்து, 4 புதிய கட்டிடப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.  

அதை தொடர்ந்து  143 வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர், பதிவுரு எழுத்தர், தூய்மைப் பணியாளர், அலுவலக உதவியாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 15 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் கே.என். நேரு, சென்னை மேயர் ஆர். பிரியா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்  ககன்தீப் சிங் பேடி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார், பேரூராட்சிகள் ஆணையர் டாக்டர் இரா. செல்வராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர்  தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் பா. பொன்னையா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், மதியழகன், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் டாக்டர் வி. ஜெயசந்திர பானுரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், திருப்பூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ். வினீத், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து