முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி: மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடல் நல்லடக்கம்

செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2022      தமிழகம்
CM-4 2022 11 22

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் வயது மூப்பின் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 85. அவ்வை நடராஜன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவ்வை நடராஜன் 1936-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு எனும் ஊரில் பிறந்தார். மதுரை தியாகராசர் கல்லூரியில் இவர் தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சங்க இலக்கியத்தில் பெயரிடு மரபு என்னும் பொருளில் ஆய்வு செய்து 1958-ம் ஆண்டில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். அதன் பின்னர் சங்க காலப் புலமைச் செவ்வியர் என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். 

தமிழறிஞர் அவ்வை நடராஜன் 1992 முதல் 1995 வரை தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பு வகித்தார். அதன் பிறகு, 2014-ம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத் தலைவராக இருந்தார். 2011-ம் ஆண்டு இவருக்கு நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கி கவுரவித்தது.

முன்னதாக தமிழறிஞர் அவ்வை நடராஜனுக்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராஜனின் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செய்யப்படும் என அவர் அறிவித்தார். இந்த நிலையில் நேற்று  மாலை 3 மணிக்கு அவரது உடல் காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவ்வை நடராஜனுக்கு டாக்டர் கண்ணன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அருள், டாக்டர் பரதன் என 3 மகன்கள் உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து