முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா நாளை தொடக்கம்: டிச. 6-ல் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2022      ஆன்மிகம்
Thiruvannamalai 2022 11 22

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நாளை (24-ம் தேதி) மாலை தொடங்குகிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா 17 நாட்கள் நடைபெறும். இவ்விழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நாளை (24-ம் தேதி) மாலை தொடங்குகிறது.  25-ம் தேதி சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன், 26-ம் தேதி வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் ஆகியோரது உற்சவம் நடைபெற இருக்கிறது.

இதையடுத்து, அண்ணாமலையார் கோயிலில் மூலவர் முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் வரும் 27-ம் தேதி காலை சதுர்த்தி திதி, பூராடம் நட்சத்திரம், விருச்சிக லக்கினம் மற்றும் சித்தயோகம் கூடிய சுப தினத்தில் காலை 5.30 மணியில் இருந்து 7 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது.  அதன் பிறகு, பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் ஆரம்பமாகிறது. 

மகா தேரோட்டம் டிசம்பர் 3-ம் தேதி காலை நடைபெற உள்ளது. பஞ்சமூர்த்திகள் என்றழைக்கப்படும் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனித் திருத்தேர்களில் மாட வீதியில் பவனி வந்து அருள்பாலிக்கின்றனர்.  ஒவ்வொரு திருத்தேரும் நிலைக்கு வந்த பிறகு, அடுத்த திருத்தேரின் புறப்பாடு இருக்கும். 

காலையில் தொடங்கும் மகா தேரோட்டம் இரவு வரை நீடிக்கும். ஒரே நாளில் 5 திருத்தேர்களின் பவனி வருவது என்பது கூடுதல் சிறப்பை பெற்றதாகும்.   அதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகைத் தீபத் திருவிழா டிசம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. அண்ணாமலையார் கோயிலில் உள்ள மூலவர் சன்னதியில் அதிகாலை 4 மணியளவில் பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றி வைக்க உள்ளனர். பின்னர் பிரம்மதீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறும். மாலை 5.50 மணியளவில், தங்க கொடி மரம் முன்பு, ஆண் பெண் சமம் என்ற தத்துவத்தை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில், அர்த்தநாரீஸ்வரர் காட்சி கொடுக்க உள்ளார். 

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்நிகழ்வு நடைபெறும். இதையடுத்து, மலையே மகேசன் என போற்றப்படும் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் பருவத ராஜகுல வம்சத்தினர் 5 அடி உயரம் உள்ள கொப்பரையில் மகா தீபத்தை ஏற்றி வைக்க உள்ளனர். ஜோதி வடிவாய், மலை உச்சியில் அண்ணாமலையார் காட்சி கொடுப்பதால், கோயில் நடை அடைக்கப்படும். 11 நாட்களுக்கு மகா தீபத்தை தரிசிக்கலாம்.

அதை தொடர்ந்து 17-வது நாளான டிசம்பர் 10-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகைத் தீபத் திருவிழா நிறைவு பெறுகிறது. இவ்விழாவில் முக்கிய நிகழ்வாக, உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் டிசம்பர் 8-ம் தேதி கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

 

2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கு சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, விரிவான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும், பாதுகாப்புப் பணிகளை காவல்துறையும் செய்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து