முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1043 நாட்களுக்கு பிறகு சதம் விளாசிய வார்னர்

செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2022      விளையாட்டு
Warner 2022 11 22

Source: provided

36 வயதான டேவிட் வார்னர், கடந்த 2009 வாக்கில் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அறிமுகமானார். கடைசியாக கடந்த 2020 ஜனவரி வாக்கில் இந்திய அணிக்கு எதிராக வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் அவர் சதம் பதிவு செய்திருந்தார். அதன் பின்னர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்றிலும் மொத்தம் 71 இன்னிங்ஸ் விளையாடிய அவரால் சதம் பதிவு செய்ய முடியவில்லை. 

நேற்று அந்த தாகத்தை போக்கிக் கொண்டுள்ளார் அவர். இது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய வீரர் விராட் கோலி சதம் விளாச எடுத்துக் கொண்ட நாட்களை காட்டிலும் 23 நாட்கள் கூடுதலாகும். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் உடன் இணைந்து 269 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் வார்னர். 102 பந்துகளில் 106 ரன்களை அவர் எடுத்தார். இதில் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும். 

________________

சாம்சன், உம்ரான் மாலிகிற்கு ஆதரவாக டூவிட்டரில் கருத்து 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், இந்திய அணி நியூசிலாந்தில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டம் மழையால் ரத்தானது. 2-வது போட்டியில் இஷான் கிஷன், ரிஷப் பண்ட், புவி, வாசிங்டன் சுந்தர் இடம் பிடித்திருந்தனர். வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.நேற்று 3-வது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வாசிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு ஹர்சல் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டார். 

உம்ரான் மாலிக், சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ரிஷப் பண்ட், புவனேஷ்வர் குமார் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டது ரசிகர்களை கோப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது. மேலும், பல வருடங்களாக வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் சஞ்சு சாம்சன், அதிவேகமாக பந்து வீசும் உம்ரான் மாலிக் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காதது குறித்து டுவிட்டர்வாசிகள் அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

________________

வானவில் நிற டிசர்ட் அணிந்து வர தடை

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா - வெல்ஸ் அணிகள் இடையே போட்டி நேற்று நடைபெற்றது. அல் ரியான் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியை காண அமெரிக்கா பத்திரிக்கையாளர் கிராண்ட் வெல்ஹ் சென்றார். அவர், 'வானவில் நிற டிசர்ட்' அணிந்து மைதானத்திற்குள் செல்ல முயன்றார். அப்போது, அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். 'வானவில் நிற டிசர்ட்' எல்ஜிபிடி எனப்படும் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவாகதாக கூறப்படுகிறது. 

இதனால், பத்திரிக்கையாளர் கிராண்டை தடுத்து நிறுத்திய கத்தார் போலீசார் மைதானத்திற்குள் நுழைய வேண்டுமானால் வானவில் நிற டிசர்ட்டை கழற்றிவிட்டு வேறு உடை அணிய வேண்டும் என கூறியுள்ளனர்.இறுதியில் 30 நிமிடங்களுக்கு பின் டிசர்ட்டை மாற்றிய பின் பத்திரிக்கையாளர் கிராண்டை கத்தார் போலீசார் மைதானத்திற்குள் அனுமதித்துள்ளனர்.

_____________

டென்மார்க் - துனிசியா போட்டி சமனில் முடிந்தது

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் டென்மார்க் - துனிசியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக போராடினர். 

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனை தொடர்ந்து நடந்த 2வது பாதி ஆட்டத்திலும் கோல் எதுவும் அடிக்கப்படாதால், ஆட்டம் சமனில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து