முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலை தேடுவதாக ஏமாற்றி கோவையில் சுற்றிய ஷாரிக் : விசாரணையில் தகவல்

புதன்கிழமை, 23 நவம்பர் 2022      தமிழகம்
Shariq 2022 11 23

Source: provided

கோவை : வேலை தேடுவதாக ஏமாற்றி கோவையில் ஷாரிக் சுற்றிய தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஆட்டோவில் பயணித்த முகமது ஷாரிக் என்பவன் தான் வெடிகுண்டை எடுத்து சென்று நாச வேலையில் ஈடுபட திட்டமிட்டதும், அவனுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இந்த சம்பவத்தில் இவனை தவிர வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில், ஷாரிக் கோவையில் தங்கியிருந்த தகவல் கிடைத்தது. கர்நாடக தனிப்படை போலீசார் உடனடியாக கோவைக்கு வந்தனர்.

கோவை காந்திபுரத்தில் ஷாரிக் தங்கிய விடுதிக்கு கோவை மாநகர போலீசாருடன் இணைந்து, கர்நாடக போலீசார் சென்றனர். அங்கு விடுதி முழுவதும் சோதனை மேற்கொண்ட போலீசார், விடுதி உரிமையாளர், மேலாளர் ஆகியோரிடம் விசாரித்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:- மங்களூரு குண்டு வெடிப்பு குற்றவாளியான முகமது ஷாரிக் கடந்த செப்டம்பர் மாதம் 3-ந் தேதி காலை கர்நாடகாவில் இருந்து கோவை காந்திபுரத்திற்கு பஸ்சில் வந்தான். பஸ்சை விட்டு இறங்கியதும், பஸ் நிலையம் அருகே உள்ள விடுதிக்கு சென்றான். அங்கு தனக்கு தங்குவதற்கு ஒரு அறை வேண்டும் என கேட்டுள்ளான். 

பணியில் இருந்த ஊழியர், உங்களது பெயர் என்ன, எங்கிருந்து வருகிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு அவன், தனது பெயர் கவுரி என்றும், கர்நாடகாவில் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளான். என்ன விஷயமாக இங்கு வந்துள்ளீர்கள் எனவும் ஊழியர்கள் கேட்டுள்ளனர். அதற்கு தான் இங்கு வேலை தேடி வந்துள்ளதாக தெரிவித்துள்ளான்.

இதையடுத்து ஊழியர், அடையாள அட்டை ஏதாவது இருந்தால், அதன் நகை கொடுங்கள் என கேட்டனர். இதையடுத்து அவன் ஆதார் அட்டையை எடுத்து கொடுத்துள்ளார். அதில் கவுரி என்றும், அந்த ஆதார் கார்ட்டில் ஷாரிக்கின் புகைப்படமும் இருந்துள்ளது. கவுரி என்று கூறியதால் அதுதானே அவரது பெயர் என அங்கிருந்த ஊழியர்கள் நம்பியுள்னர். அதனை நம்பியே அறையும் ஒதுக்கி கொடுத்துள்ளனர்.

4 நாட்கள் கோவையில் விடுதியில் தங்கி இருந்த அவன் இரவில் மட்டுமே அறையில் தங்கி உள்ளான். பகல் நேரங்களில் அறையில் இருப்பதே இல்லை. வெளியிலேயே சுற்றி திரிந்துள்ளான். யாராவது கேட்டால் வேலை தேடுவதாக கூறியுள்ளான். மற்றபடி அவன் குறித்த எந்த தகவலும் அங்கிருந்தவர்களுக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து