முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம்: ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவிப்பு

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2022      அரசியல்
Ruby-Manokaran-2022 11 24

காங்கிரஸ் கட்சியில் இருந்து நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரனை தற்காலிகமாக நீக்கம் செய்து காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது. 

சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15-ம் தேதி காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக கட்சியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மற்றும் எஸ்.சி. பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் ஆகியோருக்கு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. அதில் வருகிற 24-ம் தேதி(நேற்று) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற உள்ள ஒழுங்கு நடவடிக்கை குழுவில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டிருந்தது. 

அதன்படி, காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மோதல் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்தும், ஒழுங்கு நடவடிக்கை குழுவில் நேரில் ஆஜராக அவகாசம் கேட்டும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கடிதம் அனுப்பி இருந்தார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது. 

ரூபி மனோகரன் சொல்லும் காரணம் ஏற்புடையது அல்ல. அடுத்த கூட்டத்தில் ஆதாரங்களுடன் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அதுவரை ரூபி மனோகரன் கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவதாக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது. 63 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் அளித்த மனுவின் அடிப்படையில் ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ரூபி மனோகரன் கூறுகையில், 

நான் 20 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வருகிறேன். நாங்குநேரி தொகுதியில் அதிக அளவில் உறுப்பினர்களையும் சேர்த்துள்ளேன். நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. செய்யாத தவறுக்காக என்னை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி இருப்பது வருத்தம் அளிக்கிறது. சட்டமன்ற தொகுதியில் எனக்கு பல வேலைகள் உள்ளன. அதனால் தான் ஆஜராகவில்லை. எனது விளக்கத்தை கேட்ட பின்னர் தானே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து