முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைன் சூதாட்ட தடை: கவர்னருக்கு விளக்க கடிதம் அனுப்பியது தமிழக அரசு : அமைச்சர் ரகுபதி தகவல்

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2022      தமிழகம்
Raghupati 2022 11 25

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா குறித்து கவர்னர் கேட்ட விளக்கங்களுக்கு பதிலளித்து தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன்பிறகு இந்த சட்ட மசோதாவை கவர்னரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என். ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. இது தொடர்பாக பல தரப்பில் இருந்தும் கவர்னருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. 

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சமீபத்தில் பேட்டி அளித்த போது, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அவருக்கு சட்ட மசோதாவில் சந்தேகம் இருந்தால் அதை தெளிவுபடுத்துவோம் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தொடர்பாக கவர்னர் சில விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு அதை திருப்பி அனுப்பி இருந்தார். 

அதில், ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா? என்றும் இதற்கு முன்பாக கொண்டு வரப்பட்ட ஆன் லைன் ரம்மி தடை சட்டத்திற்கு நீதி மன்றம் கேட்ட சில கேள்விகளையும் கவர்னர் குறிப்பிட்டு இருந்ததாக தெரிகிறது. இந்த விளக்க கடிதம் சட்டத்துறைக்கு கிடைத்ததும் அதை உள்துறைக்கு அனுப்பி விரிவான பதில் தயாரிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டது. 

இந்நிலையில், கவர்னர் கேட்ட விளக்கங்களுக்கு பதிலளித்து தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:- 

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா குறித்து கவர்னர் கேட்ட விளக்கங்களுக்கு பதலிளித்து தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. உரிய விவரங்களை சேகரித்து முறையாக ஆய்வு செய்து வல்லுநர் அளித்த அறிக்கைக்கு பிறகே சட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதா, அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டே கொண்டு வரப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவை பரிசீலிப்பதாக கவர்னர் கூறியுள்ளார். இருப்பினும், தடை மசோதாவிற்கு கவர்னர் தாமதமின்றி ஒப்புதல் தர வேண்டும் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து