முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கைகள் தொடரும்: அமைச்சர் சேகர்பாபு

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2022      தமிழகம்
Shekhar-Babu 2022 11 25

Source: provided

சென்னை : தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களை மீட்டெடுக்கும் சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 

சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், வார்டு 57-க்குட்பட்ட வால்டாக்ஸ் சாலை பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13,293 சதுர அடி பரப்பளவு கொண்ட நாடக கொட்டாய் இடத்தினை அமைச்சர் பி.கே. சேகர்பாபு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது:- 

இங்கு அமைந்துள்ள சென்னை உருது நடுநிலைப் பள்ளியில் 487 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இங்கு 90 சதவீதம் அதிகமாக சிறுபான்மையின மாணவர்களே பயில்கின்றனர். போதிய கட்டிட வசதி இல்லாமல் இப்பள்ளி இயங்கி வருகிறது. தற்சமயம் மீட்கப்பட்டுள்ள இந்த இடத்தில் இப்பள்ளிக்கான கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல்வர்  தலைமையிலான அரசின் சார்பில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களை மீட்டெடுக்கும் சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும். மீட்கப்பட்ட இடத்தில் வருவாய் நோக்கத்தோடு பணிகளை மேற்கொள்ளாமல் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மாநகராட்சியின் சார்பில் விக்டோரியா மஹாலை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி விரைவில் தொடங்கப்படும். 

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. எந்த இடத்திலும் பணியாளர்களை கூட நிறுத்தவில்லை. பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் நமது மாநிலத்தில் உள்ள ராமேஸ்வரம் கோயிலுக்கு அதிகளவு வந்து செல்கின்றனர். இந்தக் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ரூ.160 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வரைவு முதல்வரின் வழிகாட்டுதலோடு மேற்கொள்ளப்பட்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து