முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்நடை மருந்துகள் தட்டுப்பாட்டை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சனிக்கிழமை, 26 நவம்பர் 2022      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : கால்நடைகளுக்கான மருந்துகள் தட்டுப்பாட்டை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

தனக்குள்ள வலி, வேதனைகளை வாய் திறந்து சொல்ல முடியாத அப்பாவி கால்நடைகளின் துயரங்களைக் கண்டறிந்து, அவைகளின் துயர் துடைக்கும் கடவுளாக கால்நடை மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் பணியாற்றுகிறார்கள். 

கடந்த 18 மாத கால தி.மு.க. ஆட்சியில் கால்நடை  துறை பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகிறது. பருவ நிலை மாற்றத்தின் போது கால்நடை மருத்துவர்கள் மாடுகளுக்குப் போடவேண்டிய தடுப்பு மருந்து இதுவரை அரசால் வழங்கப்படவில்லை என்றும்,  ஆடுகளுக்குப் போடவேண்டிய தடுப்பு மருந்து மட்டும் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  எனவே, அத்தடுப்பு மருந்தையே மாடுகளுக்குச் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், மனிதர்களுக்கும் மருந்துகள் கொள்முதல் செய்வதில்லை, கால்நடைகளுக்கும் கொள் முதல் செய்வதில்லை. 

எனவே, தி.மு.க. அரசு இனியாவது விழித்துக் கொண்டு கால்நடை மருந்துகள் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கால்நடைகளுக்குத் தேவையான தடுப்பூசி மருந்துகளை உடனடியாக கால்நடைகளுக்கு போடவேண்டும் என்றும், தலைவாசல் கால்நடைப் பூங்காவில் தோல் பதனிடும் தொழிற்சாலை ஆரம்பிக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டுமென்றும், சிவகங்கை, செட்டிநாடு கால்நடைப் பண்ணையில் மீண்டும் முழு அளவில் பாரம்பரிய கால்நடைகளைக் காக்கும் வகையில் அதிகளவு நாட்டின கால்நடைகளை வளர்க்க வேண்டும் என்றும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்.  இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து