முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாளையங்கோட்டையில் பொருநை இலக்கிய திருவிழா: இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சனிக்கிழமை, 26 நவம்பர் 2022      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை : இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும் என்று பொருநை இலக்கிய திருவிழாவையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். 

பாளையங்கோட்டையில் இன்று வரை 2 நாட்கள் நடைபெறும் பொருநை இலக்கியத் திருவிழாவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கி கூறியிருப்பதாவது, 

தமிழ்ச் சமூகமானது இலக்கிய முதிர்ச்சியும், பண்பாட்டின் உச்சத்தையும் அடைந்த பெருமைக்குரிய சமூகம்.  கீழடியைத் தொடர்ந்து சிவகளை, கொற்கை என பல அகழ்வாய்வுகள் வழியாகவும் பல்வேறு முன்னெடுப்புகள் வழியாகவும் அறிவியல்பூர்வமாக நிறுவப்படும் நமது தொன்மை நம்முடைய பெருமை.  இந்தப் பெருமையினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்று, அறிவுசார் சமூகத்தை வார்த்தெடுக்கும் இலக்குடன் இலக்கியத் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.

தமிழின் செழுமைமிகு இலக்கிய ‌மரபுகளைப் போற்றும்‌விதமாக பொருநை, வைகை, காவிரி, சிறுவாணி, சென்னை என ஐந்து இலக்கியத் திருவிழாக்களைத் தமிழக அரசு நடத்துகிறது.  இதில் முதல் நிகழ்வாக, அன்னைமடியான பொருநை ஆற்றங்கரையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த இலக்கியத் திருவிழா சிறந்ததொரு முயற்சி.  அறிவை விரிவு செய், அகண்டமாக்கு என்று பாவேந்தர் சொன்னதற்கிணங்க நமது  தமிழ் மண்ணின் செழுமைமிக்க இலக்கிய பண்பாட்டினை உலகிற்குப் பறைசாற்ற நடைபெறும் பொருநை இலக்கியத் திருவிழாவிற்கு எனது வாழ்த்துகள்.  இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து