முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் சட்டசபை தேர்தல்: வேட்பாளர்களில் 167 பேர் மீது கிரிமினல் வழக்குகள்

சனிக்கிழமை, 26 நவம்பர் 2022      இந்தியா
court-2022-11-26

குஜராத்தில் முதல் கட்ட தேர்தலை சந்திக்கும் வேட்பாளர்களில் 167 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநில சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு வருகிற 1-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இம்முறை குஜராத்தில் ஆம்ஆத்மி கட்சியும் களம் இறங்கி உள்ளது. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.

ஆளும் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்க நம்பிக்கையுடன் பிரசாரம் செய்து வருகிறது. அவர்களை எதிர்த்து காங்கிரசும், ஆம் ஆத்மியும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். வருகிற 1-ந் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகளின் வேட்பாளர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.

89 தொகுதிகளிலும் மொத்தம் 788 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களை பற்றிய விபரங்களை சமீபத்தில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டது. இச்சங்கம் வெளியிட்ட பட்டியலில் குஜராத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விபரங்கள், அவர்களின் குற்றப்பின்னணி குறித்த விபரங்களை தெரிவித்து உள்ளனர். அதன்படி முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் 167 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது போட்டியிடும் வேட்பாளர்களில் 21 சதவீதம் பேர் கிரிமினல்கள் என்று தெரியவந்துள்ளது.

இந்த வேட்பாளர்களில் 100 பேர் கொலை, பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல் உள்ளிட்ட தீவிர குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள். இப்பட்டியலில் ஆம்ஆத்மி கட்சி முதலிடத்தில் உள்ளது. இக்கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் மட்டும் 32 பேர் உள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் காங்கிரசில் 31 பேரும், பாரதிய ஜனதா கட்சியில் 14 பேர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து