முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசி இல்லாத தமிழகத்தை உருவாக்க கோவில்களில் அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படும் : அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      தமிழகம்
Sekarba-babu 2022-09-29

Source: provided

சென்னை : பசி இல்லா தமிழகத்தை உருவாக்க கோவில்களில் அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 

சென்னை பெரம்பூர், செம்பியம் பகுதியில் உள்ள லட்சுமி அம்மன் கோயிலில் ரூ. 18.5 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  பி.கே.சேகர் பாபு துவக்கி வைத்தார்.  அதன்பிறகு அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, 

தமிழகத்தில் 49 கோயில்கள் கணக்கிடப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள் பழமை மாறாமல் சீரமைக்கப்பட்டு வருகின்றன.  தமிழகத்தில் 8 கோயில்களில் முழு நேர அன்னதான திட்டம் நடைமுறையில் உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் ஒன்றாக இருந்தது எட்டாக மாறியுள்ளது. இந்தாண்டு மேலும் 10 கோவில்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

தைப் பூசத்தை முன்னிட்டு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேர் என்கிற வீதத்தில் 20 நாட்களில் 2 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நெல்லையப்பர் கோயிலில் நாள்தோறும் 500 பேருக்கு தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கப்படுகிறது. பசி இல்லாத தமிழகத்தை உருவாக்க முதல்வர் உறுதியாக இருக்கிறார். எனவே அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படும். தங்க நகைகளை உருக்கி வைப்பு நிதியாக வைக்கும் திட்டம் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 

இதன் மூலம் கோயில் வருமானம் பெருகுகிறது.  4000 கிலோ அளவிற்கான கோயில் நகைகள் வைப்பு நிதியாக வைக்கப்படும். திருக்கோயில் வளர்ச்சிக்கு வட்டித்தொகை பயன்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து