முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செல்போன் வாங்கிக் கொடுத்து விட்டு குழந்தைகள் மீது பெற்றோர் அக்கறை காட்டுவதில்லை: ஐகோர்ட் மதுரை கிளை கவலை

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2022      தமிழகம்
madurai--high-court2022-08--11

செல்போன் வாங்கிக் கொடுத்து விட்டு, குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை காட்டுவதில்லை’ என ஆன்லைன் லாட்டரி தொடர்பான வழக்கில் ஐகோர்ட் கிளை கவலை தெரிவித்துள்ளது.

நெல்லையைச் சேர்ந்த அய்யா ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: ஆன்லைன் லாட்டரி விளையாட்டுக்களுக்கு இளம் தலைமுறையினரை ஈர்க்கும் விதமாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஆன்லைன் லாட்டரி விளையாட்டுகளுக்கான சந்தையும் தற்போது காளான்கள் போல அதிகரித்து வருகின்றது. ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதால் மன அழுத்தம், கடன், வறுமை, விவாகரத்து, தற்கொலை மற்றும் குற்றவியல் சம்பவங்கள் என தீங்குகளே அதிகம் நிகழ்கின்றன.

இதனால் ஏராளமான குடும்பங்களும் சிதைந்துள்ளன. பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் 18 வயதுக்கும் குறைவானவர்கள் ஆன்லைன் லாட்டரி, ஆன்லைன் சூதாட்டம் போன்ற விளையாட்டுகளை விளையாடி, அதனால் குற்றவாளிகளாக மாறும் சூழல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் லாட்டரி ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவதை தடுக்க நடவடிக்கை கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ஆகவே 18 வயதிற்கு கீழானவர்கள் ஆன்லைன் லாட்டரி, ஆன்லைன் சூதாட்டம் போன்றவற்றை விளையாடுவதை தவிர்க்கும் வகையில், அதற்கான இணையதளம் மற்றும் செயலிகளில் உள்நுழைய வயதை உறுதி செய்யும் ஆதார் அல்லது பான் கார்டு சான்றிதழை பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு, “18 வயதிற்கு கீழானவர்களுக்கு ஆன்லைன் லாட்டரி போன்ற விளையாட்டுக்கள் தெரிய வந்தது எப்படி? அரசுக்கு உள்ளதை விட அதிக பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்து விட்டு, குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை காட்டுவதில்லை. அவர்களை கண்காணிப்பதும் இல்லை. அதன் விளைவாகவே இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன’’ என்று கேள்வி எழுப்பினர். 

மேலும் இந்த வழக்கு தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலர் மற்றும் மத்திய நிதித்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து