முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மின் எண்ணுடன் ஆதாரை இணைக்கும் சிறப்பு முகாம்கள், ஆன் - லைன் மூலம் இதுவரை 20 லட்சம் பேர் இணைத்தனர்

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2022      தமிழகம்
Power 2022 11 22

தமிழகத்தில் மின் எண்ணுடன் ஆதாரை இணைக்கும் சிறப்பு முகாம்கள் மற்றும் ஆன்லைன் மூலம் இதுவரை 20 லட்சம் பேர் தங்கள் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைத்துள்ளனர்.

தமிழகத்தில் வீடுகள், கைத்தறி, விசைத்தறி, குடிசைகள் மற்றும் விவசாய மின் இணைப்பு தாரர்கள் மின் கட்டணம் செலுத்துவதற்காக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த 15-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. 2.34 கோடி வீடுகள், 22.87 லட்சம் விவசாய பம்பு செட்டுகள், 9.75 லட்சம் குடிசை வீடுகள், 1.65 லட்சம் விசைத்தறி ஆகிய நுகர்வோர்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது.

இந்த நிலையில் பொதுமக்கள் சிரமத்தை போக்க மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் தொடங்கியது. டிசம்பர் 31-ந்தேதி வரை இந்த முகாம் நடக்கிறது. தமிழகம் முழுவதும் 2811 பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகள் தமிழகம் முழுவதும் விறுவிறுப்படைந்துள்ளன. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் அதிக அளவு குவிந்து வருகிறார்கள்.

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தனர். கடந்த 15-ந் தேதி முதல் இதுவரை ஆன்லைனிலும், சிறப்பு முகாமிலும் 20 லட்சம் பேர் தங்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்துள்ளனர். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம் தொடங்கிய முதல் நாளான நேற்று முன்தினம் பல அலுவலகங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு சென்று மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தனர். மற்ற அலுவலகங்களில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். தமிழகம் முழுவதுமே நேற்றும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று 2-வது நாளாக சிறப்பு முகாம்களில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. நேற்றும் அனைத்து அலுவலகங்களிலும் ஏராளமானோர் திரண்டு நீண்ட வரிசையில் நின்று மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து