முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்த்திகை தீபத் திருவிழா: தி.மலையில் இன்று மகா தேரோட்டம்

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2022      ஆன்மிகம்
Thiruvannamalai 2022-12-02

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் பிரசித்தி பெற்ற மகா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. காலை முதல் இரவு வரை 5 தேர்கள் அடுத்தடுத்து மாடவீதியில் பவனி வரும். இதையொட்டி 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. தினமும் காலையிலும் இரவிலும் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழா உற்சவத்தின் 6-ம் நாளன்று இரவு வெள்ளித்தேரோட்டம் நடந்தது. வரும் 6- ம்தேதி காலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர மலை உச்சில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்நிலையில் விழாவின் 7-ம் நாளான இன்று (3-ம் தேதி) மகா தேரோட்டம் எனப்படும் பஞ்ச ரதங்கள் பவனி நடைபெறுகிறது. இன்று அதிகாலை 5.30 மணி முதல் 7 மணிக்குள் தேரோட்டம் தொடங்குகிறது. தேரோட்டத்தின் தொடக்கமாக விநாயகர் தேர் புறப்பாடு நடைபெறும். பின்னர், சுப்பிரமணியர் தேர் மாடவீதியில் பவனி வரும். மதியம் ஒரு மணி அளவில், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் அருள்பாலிக்கும் பெரிய தேர் எனப்படும் மகா ரதம் புறப்பாடு நடைபெறும். மகா ரதம் நிலையை அடைந்ததும், பராசக்தி அம்மன் தேர் புறப்பாடு நடைபெறும். 

அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்துச் செல்வது தனிச்சிறப்பாகும். தேரோட்டத்தின் நிறைவாக, சண்டிகேஸ்வரர் தேர் பவனி நடைபெறும்.  தேர் சக்கரங்களுக்கு கட்டைப் போடும் சேவைப் பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஒரே மாதிரியான சீருடை (டி- சர்ட்) வழங்கப்பட்டுள்ளன. அதோடு, அவர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் காப்பீடும் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் தடைபட்டிருந்த தேர் திருவிழா, இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் நடைபெறுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து