முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா: திருநாகேஸ்வரம் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2022      ஆன்மிகம்
Thirunageswaram 2022-12-02

நவக்கிரகங்களில் ராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில் ராகுவிற்குரிய ஸ்தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்தை திருமால், பிரம்மா, இந்திரன், சந்திரன், சூரியன் ஆகிய தேவர்களும், கௌதமர், மார்கண்டேயர், பராசரர் ஆகிய முனிவர்களும், நளன், பகீரதன், சம்புமாலி, சந்திரவர்மா ஆகிய மன்னர்களும் வழிபட்டுள்ளனர். இத்தலத்தில் ஸ்ரீராகுபகவான் திருமண கோலத்தில் நாகவல்லி, நாககன்னி என்ற இரு மனைவியருடன் மங்களராகுவாக அருள்பாலிக்கிறார். இவருக்கு பால் அபிஷேகம் செய்வித்தால் ராகுதோஷம் நீங்கும்.

இத்தகைய பெருமைமிகு தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா 11 நாள்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் இவ்விழா நேற்று  காலை அலங்கரிக்கப்பட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருள, கொடிமரத்திற்கு மாப்பொடி, திரவியப்பொடி, மஞ்சள்பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் மற்றும் கடங்களில் உள்ள புனிதநீரை கொண்டு, சிறப்பு அபிஷேகங்கள் செய்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க தனுர் லக்னத்தில் நந்திம்பெருமான் பொறித்த திருக்கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.   தொடர்ந்து மகா தீபாராதனைகள் செய்யப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 8- ம் தேதி வியாழக்கிழமை மாலை திருக்கல்யாணமும், 10-ம் தேதி சனிக்கிழமை திருத்தேரோட்டமும் தொடர்ந்து  13-ம் தேதி திங்கள்கிழமை விடையாற்றி உற்சவத்துடன் இவ்வாண்டிற்காண கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா இனிதே நிறைவு பெறுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து