முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் : இந்து சமய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2022      தமிழகம்
madurai--high-court2022-08--11

Source: provided

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும்

மதுரை : தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் கோவில்களின் மாண்பை பாதுகாக்கும் வகையில் ஆடைகளிலும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு அறிவுறுத்தியுள்ளது. 

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றக்கூடிய சீதாராமன் என்பவர் ஐகோர்ட் மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும். குறிப்பாக கோவில் சிலைகளை புகைப்படம் எடுப்பதே சிலை திருட்டுக்கு வழிவகுக்கிறது. அதனால் கோவில்களில் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் அடங்கிய அமர்வில் கடந்த செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்த  போது, இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் நாகரிகமான உடை அணிவது கிடையாது. லெக்கின்ஸ் மற்றும் அரை டவுசர் அணிந்து கொண்டு கோவிலுக்கு வருகின்றனர். இது வேதனை அளிக்கின்றது. கோவில்கள் என்பது சுற்றுலாத்தலங்கள் இல்லை. அது மக்களின் பய பக்தியை வெளிப்படுத்தக்கூடிய இடமாக இருக்கின்றது என காட்டமாக தெரிவித்தனர். 

மேலும் அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்படுத்தப்படுகிறது. கோவில் சிலைகளுக்கு முன் நின்று செல்பி எடுத்து அதனை சமூகவலைதளங்களில் பதிவிடுவது தொடர் கதையாகி வருகிறது. இதுமட்டுமல்லாமல் அந்த கோவிலில் அர்ச்சகர்களாக இருக்கக் கூடியவர்களே கோவிலுக்குள் செல்பி எடுத்துக் கொண்டு தங்களின் யூ டியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்கிறார்கள். இது ஏற்கத்தக்க விஷயம் அல்ல. 

குறிப்பாக தமிழகத்தில் இருக்கக் கூடிய கோவில்கள் சத்திரம் போல் இருக்கின்றது. திருப்பதியில் கோவில் வாசலில் கூட செல்போன் எடுத்து செல்ல முடியாது. அந்த நிலை தமிழகத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து, திருச்செந்தூர் கோவிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல உடனடியாக தடை விதிக்கப்படுகிறது. இந்த சுற்றறிக்கையை இந்து அறநிலையத்துறை உடனடியாக அமல்படுத்த வேண்டும். 

தடையை மீறி செல்போன் பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்பட்டு திருப்பி அளிக்கக் கூடாது. குறிப்பாக கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல அர்ச்சகர்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டதற்கான நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர். 

இதனிடையே இந்த வழக்கு நேற்று ஐகோர்ட் மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் கோவில்களின் புனிதம் மற்றும் தூய்மையை காக்கும் விதமாக இந்த உத்தரவுகளை அனைத்து கோவில்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். கோயில்களின் மாண்பை பாதுகாக்கும் வகையில் ஆடைகளிலும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு அறிவுறுத்தினர். அதை தொடர்ந்து கோவிலுக்குள் வரும் பக்தர்கள் மரபினை காக்கும் வகையில் ஆடைகள் அணிந்து வர விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளதாக திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து