முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

93 சட்டசபை தொகுதிகளில் நடைபெறுகிறது: குஜராத்தில் இன்று இறுதி கட்ட தேர்தல் : 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2022      தமிழகம்
Gujarat election 2022-11-27

Source: provided

அகமதாபாத் : குஜராத்தில் 93 தொகுதிகளில் 2ம் கட்ட மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்ட 833 வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. வரும் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாகுகின்றன.

தீவிர பிரசாரம்...

குஜராத் மாநிலத்தில் உள்ள 182 தொகுதிகளில், முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 63.31 சதவீத வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்ட தேர்தலுக்காக ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில நாட்களில் மட்டும் 31 பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றார். மேலும், சூரத், அகமதாபாத்தில் 3 பிரம்மாண்ட வாகனப் பேரணியை நடத்தி, வாக்கு சேகரித்தார். அதேபோல, முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று கேதா பகுதியிலும் முதல்வர் பூபேந்திர படேல் அகமதாபாத்திலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

பங்கேற்கவில்லை...

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் உள்ளிட்டோர், காங்கிரஸுக்காக வாக்கு சேகரித்தனர். தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸின் தேசியத் தலைவர்கள் அதிகம் பங்கேற்கவில்லை. உள்ளூர் தலைவர்களே பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் ஆம் ஆத்மிக்காக கடந்த சில நாட்களாக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 

வெப் கேமரா மூலம்... 

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. மத்திய குஜராத், வடக்கு குஜராத் பகுதிகளைச் சேர்ந்த 93 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்கு 60 கட்சிகளைச் சேர்ந்த 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 2.54 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதற்காக 14,975 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 13,319 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். மொத்தம் 1.13 லட்சம் தேர்தல் அலுவலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். 40,066 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இன்று வாக்குப்பதிவு... 

1995 முதல் குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போதைய தேர்தலில் முதல்வர் பூபேந்திர படேல், பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் காட்லோடியா தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பாஜக மூத்த தலைவர் ஹர்திக் படேல் விராம்காம் தொகுதியிலும், மற்றொரு மூத்த தலைவர் அல்பேஷ் தாக்கோர் காந்தி நகர் தெற்கு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

8-ம் தேதி அறிவிப்பு...

காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. எனினும், தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் முதல்வராக பதவியேற்பார். எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 3 துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. அந்த வகையில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜிக்னேஷ் மேவானி, துணை முதல்வராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால், அவர் போட்டியிடும் வட்காம் தொகுதி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இரண்டு கட்ட தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அன்றே இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும் வெளியாகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து