முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாண்டஸ் புயல் எதிரொலி: தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை

வியாழக்கிழமை, 8 டிசம்பர் 2022      தமிழகம்
Mandose 2022-12-08

Source: provided

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக டிசம்பர் 10-ம் தேதி வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இன்று (டிச.9) காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில் இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 550 கி.மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 460 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இதுதொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும்.

புயலின் தற்போதைய நிலவரப்படி 8, 9, 10 தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். இதனால் வியாழக்கிழமை டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

வெள்ளிக்கிழமையன்று (டிச.9), சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கன மழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுவையில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 10-ம் தேதியன்று, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கன மழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

வியாழக்கிழமையன்று தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டரும் சமயங்களில் 60 கி.மீட்டர் வரையிலும் பலத்த காற்று வீசக்கூடும். இன்று (வெள்ளிக்கிழமை - டிச.9) காலை முதல் மாலை வரை வட தமிழக கடலோரப் பகுதிகளில், சூறைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீட்டர் வேகத்திலும், சமயங்களில் 70 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். டிச.9-ம் தேதி மாலை முதல் டிச.10-ம் தேதி காலை வரையிலான காலக்கட்டத்தில் வட தமிழகத்தை ஒட்டியுள்ள கடலோரப் பகுதிகளில், மணிக்கு 60 முதல் 70 கி.மீட்டர் வேகத்திலும், சமயங்களில் 80 கி.மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

தென் தமிழக கடற்கரை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் வியாழனன்று சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் என்ற வேகத்தில் சமயங்களில் 60 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வெள்ளிக்கிழமையன்று மணிக்கு 50 முதல் 60 கி.மீட்டர் வேகத்திலும், சமயங்களில் 70 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வரும் 10-ம் தேதி வரை, தமிழகத்தை ஒட்டியுள்ள கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் 10-ம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை மற்றும் புறநகரைப் பொருத்தவரை அடுத்து வரும் இரு தினங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்" என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து