முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் காலநிலை மாற்ற இயக்க துவக்க விழா: 2070-ம் ஆண்டுக்கு முன்பே தமிழகம் கார்பன் சமநிலையை அடையும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2022      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை  : சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்க தொடக்க விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,

தமிழகத்திற்காக மட்டுமல்ல, இந்தியாவுக்காக மட்டுமல்ல உலகத்தின் நன்மைக்காக இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  வளிமண்டத்தில் உள்ள கார்பனின் அளவு அதிகரித்ததன் காரணமாக, புவியின் வெப்பநிலை அதிகரித்து காலநிலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. இதன் காரணமாக, மனிதர்கள் மட்டுமல்லாமல் பல்லுயிர்களும் பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்பின் விளைவுகளைத்தான் நேரடியாகக் கண்டு வருகிறோம். 

காலநிலை மாற்றத்தை உலகம் எதிர்கொள்ள, அதன் தாக்கத்தை மட்டுப்படுத்த, 2050-ம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலையை எட்டவேண்டும் என்று பல்வேறு பன்னாட்டு ஆய்வுகளும் உச்சி மாநாடுகளும் அறிவுறுத்துகின்றன. கடந்த ஆண்டு க்ளாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர்,  இந்தியா வரும் 2070-ம் ஆண்டிற்குள் கார்பன் சமநிலையை எட்டி விடும் என்று அறிவித்திருந்தார். இது எவ்வளவு தீவிரமான பிரச்சினை என்பதைத்தான் பிரதமரின் உரையும் உணர்த்துகிறது.

கடந்த ஆண்டு தி.மு.க அரசு பொறுப்பேற்றதும் பல முன்னெடுப்புகளை அறிவித்து செயல்படுத்த ஆரம்பித்துள்ளது.   துறையின் பெயரை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான காலநிலைத் திட்டத்தை அறிவித்துள்ளோம். நிதிநிலை அறிக்கையில் அதற்கென 500 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறோம். பொதுவாகவே வெப்பமண்டல நாடுகளில் உள்ள காலநிலையை, பருவங்களை கணிப்பது கடினம். இதற்காகவே அண்ணா பல்கலைக்கழகத்தில் காலநிலை ஸ்டூடியோ  ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டுக்கு என தனியான மாதிரிகளை உருவாக்கவும் அதற்கான ரேடார்களை அமைக்கவும் 10 கோடி ரூபாயை ஒதுக்கி, திட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம். காலநிலை மாற்றம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழில்முனைவோர் என சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் கொண்டுசேர்க்க  காலநிலை அறிவு இயக்கத்தை  தமிழகத்தில் செயல்படுத்தப் போகிறோம். அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளிவரும். கடல் அரிப்பைத் தடுக்கவும், கடற்கரையின் பல்லுயிரியத்தை பேணவும் பனை மரங்களை நடும் திட்டம் செயல்படுத்தப்படும்.  

இந்நிலையில் இன்னும் சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  பசுமைத் திட்டங்களுக்கான அனுமதியை இனிமேல் ஒற்றைச் சாளர முறையில் வழங்கும் வகையில், தொழில்துறையில் உள்ள Guidance TN-ஆல் திட்டங்கள் வகுக்கப்படும். இந்த முடிவு 2030-க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்தும் முயற்சியில் பெரும் பங்கு வகிக்கும்.

புதுப்பிக்கக்கூடிய ஆற்றலைப் பயன்படுத்தி உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிகரிக்கவும் அவற்றை எடுத்துச்செல்லவும் தனியான பசுமை வழித்தடம் உருவாக்கப்படும். காற்றாலைகளைப் புதுப்பிப்பதற்கான புதிய கொள்கை எரிசக்தித் துறையால் வெளியிடப்படும். தமிழக அரசு 1,000 கோடி ரூபாயில் பசுமை நிதியம் ஒன்றை உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  அதன் முதற்கட்டமாக, நூறு கோடி ரூபாய் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சூழல் சார்ந்த கட்டுமானங்களை உருவாக்குவதற்கு தேசிய அளவிலும் உலக அளவிலும் நிதி திரட்ட இந்த நிதியம் பயன்படுத்தப்படும்.

இந்தியா கார்பன் சமநிலையை அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ள 2070-ம் ஆண்டிற்கு முன்னதாகவே தமிழ்நாடு கார்பன் சமநிலையை அடையும் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். அதற்கான அனைத்து திட்டங்களையும் அரசு செயல்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து