முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல், பிரியங்காவுடன் ராஜஸ்தானில் பிறந்த நாள் கொண்டாடிய சோனியா: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2022      இந்தியா
modi-2022-09-01

காங்கிரஸ் முன்னாள் தலைவர் தலைவர் சோனியா காந்தி நேற்று தனது 76-வது பிறந்த நாளை மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்காவுடன் ராஜஸ்தானில் கொண்டாடினார். அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, நேற்று தனது 76-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது மகனான ராகுல்காந்தி, ராஜஸ்தானில் நடைபயணம் மேற்கொண்டுள்ளதால் தனது பிறந்த நாளை சவாய் மாதோபூரில் உள்ள ரந்தம்பூரில் சோனியா கொண்டாடினார்.  அதற்காக நேற்று முன்தினமே ராகுல் காந்தி ராஜஸ்தான் சென்றிருந்தார். அவருடன் அவரது மகளும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியும் சென்றிருந்தார். சவாய் மாதோபூர் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர். 

இந்நிலையில் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  சோனியா காந்தி நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும். அவர் நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழ பிராத்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார். அதே போல், காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட தலைவர்களும் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சோனியா காந்தியை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி  தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவருக்கு மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான ஆண்டாக வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து