முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ. 3,000 வழங்க ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

வியாழக்கிழமை, 15 டிசம்பர் 2022      தமிழகம்
OPS 2022 12 14

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ. 3 ஆயிரம் வழங்க ஓ. பன்னீர் செல்வம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

இயற்கைக்கு நன்றி செலுத்தும் விழாவாகவும், அறுவடைத் திருநாளாகவும், பயிர் விளையக் காரணமாக இருந்த பகலவனை வழிபடும் நாளாகவும், ஆண்டு முழுவதும் அரும்பணி புரிந்த கால்நடைகளுக்கு காணிக்கையாக்கும் நாளாகவும் பொங்கல் திருநாள் தமிழ்நாடு முழுவதும் சாதி, மத பேதமின்றி நான்கு நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வேட்டி, சேலை வழங்குவது, பொங்குல் தொகுப்பு வழங்குவது, ரொக்கமாக பணம் வழங்குவது என்பது பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகின்ற ஒரு நடைமுறையாகும். 2021-ம் ஆண்டு மே மாதம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தி.மு.க., கடந்த 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று ஆணையிட்டது. 

ஆனால், இந்தப் பொருட்கள் தரமற்றவை என்றும், 21 பொருட்கள் என்பதற்கு பதிலாக 15 பொருட்கள் மட்டுமே அளிக்கப்பட்டதாகவும், பெரும்பாலான பொருட்கள் பிற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டது என்றும் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர்  அறிவித்தாலும் பயனடைந்தவை தனியார் நிறுவனங்கள்தான் என்றும், 1,200 கோடி ரூபாய் அரசாங்கப் பணம் விரயமாக்கப்பட்டதுதான் மிச்சம் என்றும் தமிழக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவை அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்களுக்குப் பதிலாக ரொக்கமாக ரூ. 3,000 ரூபாய் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே நிலவுகிறது. இதன்மூலம் முறைகேடுகளுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கும் நிலை உருவாகும். 

தமிழக மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், 2023-ம் ஆண்டு பொங்கல் திருநாளினை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கம் வழங்க வேண்டுமென்று அ.தி.மு.க. சார்பில் முதல்வரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து