முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மறுபதிப்பு செய்யப்பட்ட 108 அரிய பக்தி நூல்கள் : முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2023      ஆன்மிகம்      தமிழகம்
CM-1 2023 01 19

சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறையின் பதிப்பகப் பிரிவின் மூலம் மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை வெளியிட்டு, புத்தக விற்பனை நிலையத்தையும் திறந்து வைத்தார். மேலும் கருணை அடிப்படையில் 10 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் முதல்வர்  வழங்கினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 20-ம் தேதி அன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக்குழுக் கூட்டத்தில், திருக்கோயில்களின் தலவரலாறு, தலபுராணங்கள், திருக்கோயில் தொடர்பான ஆகமங்களை ஆவணப்படுத்தி தமிழில் புத்தகமாக வெளியிடுதல், நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள், பழமையான அரிய நூல்கள், திருக்கோயில் கட்டடக்கலை, செந்தமிழ் இலக்கியங்களை மறுபதிப்பு செய்வதுடன், புதிய சமய நூல்கள் மற்றும் திருக்கோயில்களில் கண்டறியப்படும் பழமையான ஓலைச்சுவடிகளைத் திரட்டி எண்மியப்படுத்தி நூலாக்கம் செய்திடவும், அந்நூல்களை திருக்கோயில்கள் மற்றும் திருமடங்கள் வாயிலாக பக்தர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்திடவும் தீர்மானிக்கப்பட்டது. 

அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட பதிப்பகப் பிரிவின் மூலம் முதற்கட்டமாக, மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ள இந்து சமயம் சார்ந்த தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, அபிராமி அந்தாதி, நாலாயிர திவ்யபிரபந்தம், தமிழகக் கலைகள், சைவமும் தமிழும், இந்தியக் கட்டடக் கலை வரலாறு, அவ்வையார் வரலாறு, பதினெண் புராணங்கள் உள்ளிட்ட 108 அரிய நூல்களை முதல்வர் நேற்று வெளியிட்டார். 

அதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றி பணிக் காலத்தில் இயற்கை எய்திய 

10 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், காவலர், கடைநிலை ஊழியர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார். 

மேலும், திருக்கோயில்களில் கண்டறிப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுருணை ஓலைகள், செப்புப் பட்டயங்கள் மற்றும் பிற ஓலைச்சுவடிகளையும், அவற்றை பராமரித்துப் பாதுகாக்கும் பணிகளையும், ஆணையர் அலுவலக வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிட கட்டுமானப் பணிகளின் தற்போதைய முன்னேற்றத்தையும் முதல்வர் பார்வையிட்டார்.

பின்னர், ஆணையர் அலுவலகத்தில் பதிப்பகப் பிரிவின் செயல்பாடுகளை பார்வையிட்ட முதல்வர் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையத்தையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆழ்வார் திருநகரி, ஸ்ரீ மத் பரபஹம்ஸ ரெங்கராமானுஜ ஜீயர் என்ற எம்பெருமானார் ஜீயர், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் 46-வது குருமகாசன்னிதானம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருக்கயிலாய மரபு மெய்க்கண்டார் வழிவழி பேரூர் ஆதீனம் தவத்திரு சாத்தலிங்க மருதாச்சால அடிகளார், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர், சட்டமன்ற உறுப்பினர் எழிலன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்தர மோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் கண்ணன், திருமகள், ஹரிப்ரியா, இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து