முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைக்கால பொதுச்செயலாளர் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2023      இந்தியா
Edappadi 2020 11-16

கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்துடன் கூடிய விண்ணப்பத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி மகேஷ்வரி தினேஷ் தலைமையிலான அமர்வு முன் நேற்று அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு முறையீடு செய்யப்பட்டது. அதில், ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

தேர்தல் ஆணைய இணையதளத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் பதிவேற்றப்படும்பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடும். எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆகிவிடுவார். சின்னமும் கிடைத்துவிடும் என்ற நோக்கில் இந்த இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி கோரப்பட்டது. 

மேலும், இபிஎஸ் தரப்பில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்களது தரப்பில் தனியாக வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம். ஆனால், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்துடன் கூடிய விண்ணப்பத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. எனவே இந்த விண்ணப்பத்தை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று முறையிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உங்களது இந்த கோரிக்கை குறித்து தெரிவித்துவிட்டீர்களா? என்று கேள்வி எழுப்பினர். அப்போது இ.பி.எஸ். தரப்பில், இதுதொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டோம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வரும் 30ஆம் தேதி அன்று முறையீடு செய்யுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. அன்றைய தினம், இந்த முறையீடு தொடர்பாக விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து