முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து பார்லி.யில் குரல் எழுப்ப வேண்டும் : தி.மு.க. எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2023      தமிழகம்
CM-1 2023 01 29

Source: provided

சென்னை : நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவது குறித்து பாராளுமன்ற கூட்டத்தில் இரு அவைகளிலும் குரல் எழுப்பி வலியுறுத்த வேண்டும் என்று தி.மு.க. எம்.பி.க்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்பிக்கள் கூட்டம் நேற்று நடந்தது. பொது செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் தி.மு.க. பொருளாளரும், தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா உள்ளிட்ட அனைத்து மக்களவை, மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில், தி.மு.க. சார்பில் எடுத்து வைக்கப்பட வேண்டிய முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில்,  

தமிழ்நாடு தொடர்பான முக்கிய பிரச்னைகள் குறித்தும், குஜராத் வன்முறை பற்றி பி.பி.சி. வெளியிட்ட ஆவணப் பட சர்ச்சை, இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து வெளிவந்துள்ள அறிக்கை உள்ளிட்டவை குறித்து பாராளுமன்றத்தில் உறுதியான விவாதங்களை எடுத்து வைத்திட எம்.பி.க்களுக்கு  முதல்வர் அறிவுறுத்தினார்.

அதே போன்று, தமிழ்நாடு அரசால், ஒன்றிய அரசுக்கு எழுதப்பட்டுள்ள கடிதங்களின் நிலை குறித்தும்,  முக்கியமாக நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவது,  தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்துவது, கைது செய்வது, படகுகளை இலங்கை ராணுவம் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்குவது, சிறுபான்மையினர் மாணவர்களுக்கு 1 முதல் 8-ம் வகுப்பு வரை வழங்கி வந்த மெட்ரிக் கல்வி உதவித் தொகையை நிறுத்தியது, மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிப்பது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது, சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்தும் இரு அவைகளிலும் குரல் எழுப்ப வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து