முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக இளைஞர்கள் மீது தாக்குதல்: திருப்பூரில் 2 வடமாநில தொழிலாளர்கள் கைது

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      தமிழகம்
Jail 2023 01 30

Source: provided

திருப்பூர் : திருப்பூரில் தமிழக இளைஞர்களை விரட்டித் தாக்கிய சம்பவம் தொடர்பாக வடமாநிலத் தொழிலாளர்கள் இருவரை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக இளைஞர்கள் இருவருக்கும், வடமாநிலத் தொழிலாளர்கள் 4 பேருக்கும் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி நிறுவனத்துக்கு முன்பாகத் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, வடமாநிலத் தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் தமிழக இளைஞர்கள் இருவரை விரட்டும் காட்சிகள் இணையதளங்களில் கடந்த வியாழக்கிழமை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக இளைஞர்களைத் தாக்கிய வடமாநிலத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பாகத் திரண்டனர். அப்போது காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட இரு தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில், பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராகப் பணியாற்றி வந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஏ.ரஜத்குமார்(24),ஆர்.பரேஷ்ராம்(27) ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இணையதளங்களில் தவறான தகவல்களைப் பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து