முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குட்கா தடை: சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வரப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2023      தமிழகம்
Ma-Suphramanian 2021 12-06

Source: provided

கோவை : குட்கா மீது தடை விதிக்க மேல்முறையீடு  செய்யப்பட்டுள்ளது. வேண்டுமானால் தமிழக சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். 

கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் விழா கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் உள்ள அரங்கத்தில் நடந்தது. இதில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு 100 மாணவ, மாணவிகளுக்கு வெள்ளை அங்கியினை அணிவித்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:- 

கோவையில் மருத்துவ துறையில் புதிய கட்டமைப்புகள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி சென்ற போது அங்குள்ள ஆம் ஆத்மி ஆஸ்பத்திரியை பார்வையிட்டார். அந்த ஆஸ்பத்திரியின் கட்டமைப்பை பார்த்து தமிழகத்திலும் ஏழை, எளிய மக்கள் பயன் அடைய வேண்டும் என முடிவு செய்தார். இதையடுத்து தமிழக முழுவதும் 708 ஆஸ்பத்திரிகளை கட்ட உத்தரவிட்டார். அதில் ஒரு டாக்டர், ஒரு நர்ஸ், ஒரு மருந்து ஆளுநர், ஒரு உதவியாளரை நியமித்துள்ளார். 

தமிழகத்திலேயே கோவை மாவட்டத்திற்கு 72 ஆஸ்பத்திரிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மாநகராட்சிக்கு 64 ஆஸ்பத்திரிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த 708 ஆஸ்பத்திரிகளில் பெரும்பாலான கட்டிடப் பணிகள் முடிவடைந்து விட்டது. ஒரு சில ஆஸ்பத்திரிகள் மட்டும் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அதுவும் விரைவில் நிறைவடைய உள்ளது. 

மருத்துவத்துறை வரலாற்றில் தமிழகத்தில் முதல் முறையாக 500-க்கும் மேற்பட்ட ஆஸ்பத்திரிகளை முதல்வர் பிப்ரவரி 6-ம்  தேதி திறந்து வைக்க உள்ளார். இது தவிர மணியக் காரம்பாளையத்தில் ஒரு சுகாதார நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. 

கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டுகளில் 400 புற நோயாளிகள் வந்து கொண்டிருந்தனர். தற்போது அது 1200 ஆக உயர்ந்துள்ளது. அரசு ஆஸ்பத்திரியில் 4000 ஆக உயர்ந்துள்ளது. இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் திட்டத்தில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு ரூ.56 லட்சம் உபகரணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 500 இடங்கள் விபத்துக்கள் ஏற்படும் ஆபத்தான இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளுக்கு உட்பட்ட 679 ஆஸ்பத்திரியில் அரசு சார்பில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் விபத்து ஏற்பட்டு 48 மணி நேரத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும். விபத்து ஏற்பட்டவரை ஆஸ்பத்திரியில் அனுமதிப்பவருக்கு ரூ. 5,000 ஊக்க தொகையும் வழங்கப்படுகிறது. அதன்படி ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 923 பேர் விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்காக ரூ. 125 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 

வருகிற 2-ம் தேதி தமிழக முதல்வர் 787 பணியிடங்களுக்கு பணி நியமன ஆணையை வழங்க உள்ளார். தமிழகம் காச நோயாளிகள் இல்லாத மாநிலமாக உருவாக்கப்படும். 

குட்கா மீதான தடையை கோர்ட்டு நீக்கி உள்ளது. ஆனால் தமிழக அரசு போதை பொருட்களை தமிழகத்தில் இருந்து முழுமையாக ஒழிப்பதிலேயே குறிக்கோளாக உள்ளது. இதனால் வியாபாரிகள் கடைகளில் குட்காவை விற்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன். குட்கா மீது தடை விதிக்க மேல்முறையிடும் செய்யப்பட்டுள்ளது. வேண்டுமானால் தமிழக சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து