முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல திரைப்பட இயக்குனர் டி.பி.கஜேந்திரன் காலமானார் : முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2023      சினிமா
CM-2 2023 02 05

Source: provided

சென்னை : பிரபல திரைப்பட இயக்குனர் டி.பி. கஜேந்திரன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமானவர் டி.பி.கஜேந்திரன்(வயது68). இவர் கே. பாலசந்தர், விசு, ராம நாராயணன் போன்றோரிடம் 60 படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். மேலும், எங்க ஊரு காவல்காரன், மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாதன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர்.

சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான திரையுலக வாழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக இயக்குநர் டி.பி.கஜேந்திரன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு நேற்று காலை காலமானார். 

இவரின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 

பிரபல இயக்குநரும், நடிகரும், எனது கல்லூரித் தோழருமான இனிய நண்பர், டி.பி.கஜேந்திரன் மறைவுற்ற செய்தி, மிகுந்த வருத்ததையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டுத் தங்கம் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியதுடன், பல்வேறு திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றி, கலையுலகிற்கு தமது சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தவர்.

கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேரில் சென்று நலம் விசாரித்து வந்தேன். தற்போது எதிர்பாராத விதமாக அவர் உடல்நலக் குறைவால் காலமாகி இருப்பது வேதனையளிக்கிறது. 

டி.பி.கஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து