முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஐகோர்ட்டில் விக்டோரியா கவுரி உள்பட கூடுதல் நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்றனர் : பொறுப்பு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2023      தமிழகம்
Victoria-Gowry 2023 02 07

Source: provided

சென்னை : சென்னை ஐகோர்ட்டு புதிய நீதிபதிகளாக எல்.சி.விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி, கே.சி.திலகவதி ஆகியோரை நிய மித்து ஜனாதிபதி திரெளபதி முர்மு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து இவர்கள் 5 பேரும் நேற்று காலையில் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

ஆர்.சண்முக சுந்தரம் புதிய நீதிபதிகளை வரவேற்று பேசினார். இவரை தொடர்ந்து தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், வக்கீல் சங்க நிர்வாகிகளான கமலநாதன், செங்கோட்டுவேல் உள்ளிட்டோரும் வரவேற்று பேசினர். அனைவருக்கும் நன்றி தெரிவித்து புதிய நீதிபதிகள் பேசினார்கள்.

புதிய நீதிபதி விக்டோரி கவுரி பேசுகையில்., முதலில் லலிதாம்பிகை அம்மனுக்கும், மாதா அமிர்தானந்தமயிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குமரி மாவட்டத்தில் குக்கிராமத்தில் பிறந்த எனக்கு இந்த பதவி கிடைப்பதற்கு காரணமான எனது பெற்றோர் லட்சுமி சந்திரா-சரோஜினி சந்திரா, மாமனார் தங்கமணி, கணவர் துளசி முத்துராம் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை நீதிபதி பதவிக்கு பரிந்துரைத்த ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் முன்னேற்றத்துக்கு விவேகானந்தர் கூறிய கருத்துக்களை ஏற்று அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விக்டோரி கவுரி பேசினார்.

நீதிபதி பி.பி.பாலாஜி: 

நீதித்துறையில் வக்கீல்களும், நீதிபதிகளும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பார்கள். ஆனால் இருவரும் தினமும் நேருக்கு நேர் சந்திக்கின்றனர். நாணயத்தின் இரு பக்கங்களும் எப்போதும் சந்திக்க முடியாது. அதனால் அந்த கருத்தை ஏற்க முடியாது. பல்வேறு வழக்குகளை விவரங்களுடன் தாக்கல் செய்யும் வக்கீல்களை கம்ப்யூட்டரின் இன்டிட்டி வைஸ் என்றும், தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளை அவுட்புட்டிவைஸ் என்றும் அழைக்கலாம். குழந்தையின் முதல் நடை போல நீதித்துறையில் எனது பயணத்தை தொடங்குகிறேன்.

நீதிபதி கே.கே.ராம கிருஷ்ணன்: 

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் விவசாய கூலி குடும்பத்தில் நான் பிறந்தேன். நான் பிறந்த 6-வது மாதத்தில் எனது தந்தை காலமானார். தாயார் மற்றும் தாய் மாமன், சகோதரர் வருமானத்தில் பள்ளி படிப்பையும், சட்ட படிப்பையும் முடித்தேன். இந்த பொறுப்புக்கு வருவதற்கு பலர் காரணமாக இருந்துள்ளனர். அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல நீதிபதிகள் கலைமதி, திலகவதி ஆகியோரும் நன்றி தெரிவித்து பேசினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து