முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு: வெயிலின் தாக்கம் மேலும் சில நாட்கள் அதிகரிக்கும் : வானிலை மையம் தகவல்

சனிக்கிழமை, 27 மே 2023      தமிழகம்
SUN-1 2023-02-28

Source: provided

சென்னை : கடந்த 4-ம் தேதி தொடங்கிய கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இருந்தாலும் மேலும் சில நாட்கள் வெயிலின் தாக்கம்  அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் மே 4-ம் தேதி தொடங்கியது. பொதுவாக அக்னி நட்சத்திரம் 25 நாட்கள் வரை நீடிக்கும் அதன்படி நடப்பாண்டில் கடந்த 4-ம் தேதி முதல் இன்று 28-ம் தேதி  வரை நீடிக்கிறது.  

இந்த ஆண்டுக்கான அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது.  நடப்பாண்டை பொறுத்தவரை  அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே மார்ச் இறுதியில் இருந்தே வெயில் கொளுத்த தொடங்கியது. வெயிலின் தாக்கம் மிகமிக அதிகமாக இருந்தது. இதனால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.   

அக்னி நட்சத்திரத்துக்கு முன்பே தமிழகத்தின் பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. அதே நேரத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய ஒரு வாரத்திலேயே சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பல இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வந்தது. குறிப்பிட்ட  சில இடங்களில் கனமழையும் பெய்தது. 

இதனால் வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்து வந்தது. அசானி புயல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் இவைகளால்   தமிழகத்தின் பல பகுதிகளில் அக்னி நட்சத்திர கால கட்டத்தில் அவ்வப்போது மழை பெய்தபடியே காணப்பட்டது. இதனால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் போது சுமார் 2 வார காலத்திற்கு மேலாக வெயில் தணிவாக இருந்ததாக வானிலை மையம் தெரிவித்தது.  

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது.  இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் போது அதிகபட்சமாக கடந்த 23-ம் தேதி மீனம்பாக்கத்தில் 104 டிகிரி வெயில் பதிவாகியது.  

கடந்த 24-ம்  தேதி சென்னை, மீனம்பாக்கம், கடலூர், கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் 104 டிகிரி வெயில்  பதிவானது.  அன்றைய தினம் தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவானது.

இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைந்தாலும் மேலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து