முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டத்தை இந்திய அணி வெல்ல வாய்ப்பு: நாசர் ஹூசைன் கணிப்பு

செவ்வாய்க்கிழமை, 6 ஜூன் 2023      விளையாட்டு
Nasser-Hussain 2023 06 06

Source: provided

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்ல வாய்ப்பு உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். “இந்திய அணி எந்தவிதமான கள சூழலிலும் வெல்லும் என நான் நினைக்கிறேன். அதற்கு ஆஸ்திரேலியாவில் அவர்களது செயல்பாடு உதாரணம். 

சூரியன் பிரகாசிக்கும் வகையில் வானிலை ஒத்துழைத்தால் அவர்கள் 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3-வது வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாக்கூர் என்ற ஃபார்முலாவின் அடிப்படையில் அணியை தேர்வு செய்யலாம். ஷமிக்கும், கம்மின்ஸுக்கும் இடையே நிச்சயம் பலமான போட்டி நிலவுகிறது. அது ட்யூக் பந்தில் அவர்களது லெந்த் மற்றும் லைனில் எப்படி இருக்கப் போகிறது என்பதுதான்” என நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

________________

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: தனுஷ் ஸ்ரீகாந்த் தங்கம் வென்றார்

ஜெர்மனியில் நடைபெற்றுவரும் துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த் தங்கப் பதக்கம் வென்று அசத்தி உள்ளார். ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு இறுதிப்போட்டியில் ஒட்டுமொத்தமாக 249 புள்ளிகள் பெற்ற தனுஷ் ஸ்ரீகாந்த், முதலிடத்தையும் பிடித்தார். இதன்மூலம், தங்கப் பதக்கத்தையும் தனுஷ் தட்டிச் சென்றார். நடப்பு தொடரில் இந்தியா இதுவரை 3 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

---------------------

யு - 20 தடகள சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் தங்கம் வென்றார்

தென் கொரியாவில் உள்ள யெச்சியோன் பகுதியில ஆசிய யு 20 தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று நடந்த டெகாத்லான் பிரிவில் 7003 புள்ளிகள் பெற்று இந்திய வீரர் சுனில் குமார் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

இதே போன்று பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் தமன்னா, அக்ஷயா, நயனா, அபினய் ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளனர். மற்றொரு 3000 மீட்டர் ஓட்டப்போட்டியில் இந்தியாவின் புஷ்ரா கான் வெள்ளி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

________________

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி.சிந்து தோல்வி

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நேற்று தொடங்கியது. வருகிற 11-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.7 கோடியாகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்வோருக்கு ரூ.49 லட்சம் பரிசாக கிடைக்கும். இந்நிலையில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய அணியின் ஸ்ரீகாந்த் 21-15, 21-19 என்ற கணக்கில் தாய்லாந்தின் காண்டபோன் வாங்சரோயனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் பிரனோய் 15-21, 19-21 என்ற கணக்கில் ஜப்பான் வீரரான நரோகாவிடம் தோல்வியடைந்தார்.

பெண்கள் பிரிவில் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள சிந்து, 'நம்பர் ஒன்' வீராங்கனையும், உலக சாம்பியனுமான அகானே யமாகுச்சியும் மோதினர். இதில் 21-18 19-21 17-21 என்ற கணக்கில் அவர் தோல்வியடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் சாய்னா நேவால் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ராட்சனோக் இன்டோனனை எதிர்கொண்டார். இதில் 21-13, 21-15 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

________________

டோனியிடம் ஆலோசனைகளை நிறைய பெற்றேன்: கே.எஸ்.பரத்

ஆஸ்திரேலிய அணியை இந்தியா கிரிக்கெட் அணி இன்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் இந்திய அணியின் பிரதான விக்கெட் கீப்பர் சாய்ஸாக இருக்கும் கே.எஸ்.பரத், அனுபவ வீரரும், சீனியருமான டோனியிடம் இருந்து விக்கெட்கீப்பிங் சார்ந்த ஆலோசனைகள் அதிகம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“அண்மையில் முடிந்த ஐபிஎல் சீசனின் போது டோனியுடன் பேசி இருந்தேன். இங்கிலாந்தில் அவரது விக்கெட் கீப்பிங் அனுபவத்தை அப்போது என்னிடம் அவர் பகிர்ந்து கொண்டார். அதே நேரத்தில் பொதுவாக விக்கெட் கீப்பர்களுக்கு தகுந்த சில விஷயங்கள் குறித்தும் பேசினார். அது நல்லதொரு உரையாடலாக அமைந்தது. அதிலிருந்து நான் நிறைய உள்ளார்ந்த படிப்பினை பெற்றேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாளும் வீசப்படும் 90 ஓவர்களையும், ஒவ்வொரு பந்தாக விக்கெட் கீப்பர் கவனிக்க வேண்டும். இது ஆர்வம் இருந்தால் மட்டுமே சாத்தியம்” என பரத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து