முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருந்து நிகழ்ச்சியில் சாம்பியன்கள்

திங்கட்கிழமை, 14 ஜூலை 2025      விளையாட்டு
Cinnar 2025-01-20

Source: provided

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடினர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார். 

தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்டு சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் அடுத்த 3 செட்களை 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இதனையடுத்து விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்களுக்கான விருந்து நிகழ்வில் நடனமாடிய ஜன்னிக் சின்னர் மற்றும் இகா ஸ்வியாடெக் இணைந்து நடனமாடினர். இது தொடர்பான புகைப்படங்களை விம்பிள்டன் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

______________________________________________________________________________________________

ஐதராபாத் அணிக்கு பயிற்சியாளர் 

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் நிறைவு பெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசன் முடிவடைந்த சில தினங்களிலேயே அடுத்த சீசனுக்கான பேச்சுகள் எழ ஆரம்பித்து விட்டன. ஒவ்வொரு அணி நிர்வாகமும் அடுத்த சீசனுக்காக தங்களது அணிகளை தற்போதே தயார்படுத்தும் வேளையில் இறங்கி உள்ளன. ஏற்கனவே ராஜஸ்தான் அணியிலிருந்து சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. மற்ற அணிகளும் பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களின் மாற்றங்கள் குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்பட்டன.

இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வருண் ஆரோன் நியமிக்கப்பட்டுள்ளார். பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த நியூசிலாந்து முன்னாள் வீரர் ஜேம்ஸ் பிராங்க்ளினுக்கு பதிலாக வருண் ஆரோன் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த சீசனிலிருந்து (2026) அவர் பயிற்சியாளராக செயல்பட உள்ளார். இந்திய அணிக்காக தலா 9 டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள வருண் ஆரோன் அதில் மொத்தம் 29 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அத்துடன் 52 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 44 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 

______________________________________________________________________________________________

குடராமெட்ரோவா ஜோடி சாம்பியன்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ரஷியாவின் வெரோனிகா குடராமெட்ரோவா-பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டென்ஸ் ஜோடி, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ-தைவானின் சு-வெய் ஜோடி உடன் மோதியது. இதில் சிறப்பாக ஆடிய குடராமெட்ரோவா ஜோடி 3-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

______________________________________________________________________________________________

ஐ.சி.சி. சிறந்த வீரர், வீராங்கனைகள்  

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி ஜூன் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்திருந்தது. அதன்படி ஜூன் மாத சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் மற்றும் ரபடாவும், இலங்கை வீரரான பதும் நிசங்காவும் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் மார்க்ரம் ஜூன் மாத சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல் சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் ஹேய்லி மேத்யூஸ் (வெஸ்ட் இண்டீஸ்), தஸ்மின் பிரிட்ஸ் (தென் ஆப்பிரிக்கா) மற்றும் அபி பிளெட்சர் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் சிறந்த வீராங்கனையாக ஹேய்லி மேத்யூஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த விருதை பெறுவது இது 4-வது முறையாகும்.

______________________________________________________________________________________________

இந்திய தடகள வீரர் காயம்

மொனாக்கோவில் தற்போது டயமண்ட் லீக் தடகள தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆடவர் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் பங்கேற்ற அவினாஷ் சாப்ளே தவறி கீழே விழுந்து காயமடைந்தார். வாட்டர் ஜம்ப் பகுதியில் அவர் குதிக்கும்போது கீழே விழுந்தார். இதையடுத்து அவருக்கு மூட்டு, கால், தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவரின் பயிற்சியாளர் அம்ரிஷ் குமார் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, “மூட்டுப் பகுதியில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் ஓய்வில் இருக்கிறார். ஓரிரு வாரங்களில் அவர் குணமடைந்து வழக்கமான பயிற்சியில் ஈடுபடுவார்” என்றார்.

______________________________________________________________________________________________

செல்ஸி கோப்பையை வென்றது 

பிபா நடத்திய கிளப் உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வந்தன. இறுதிப் போட்டியில் பி.எஸ்.ஜி., செல்ஸி அணிகள் மோதின. இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் 3-0 என செல்ஸி அபார வெற்றி பெற்றது. கோலி பால்மர் 22,30-ஆவது நிமிஷங்களில் கோல் அடிக்க, ஜாவோ பெட்ரோ 43-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து முதல் பாதியில் 3-0 என முன்னிலைப் பெற்றது. இரண்டாம் பாதியில் எவ்வளவு முயன்றும் பி.எஸ்.ஜி. அணியினால் கோல் அடிக்க முடியாமல் சென்றது. 

இந்தப் போட்டியில் 67 சதவிகித பந்தினை பி.எஸ்.ஜி. தனது கட்டுக்குள் வைத்திருந்தாலும் கோல் அடிக்க முடியவில்லை என்பது கவனிக்கத்தக்கது. பி.எஸ்.ஜி. வீரர் நெவேஸுக்கு 85-ஆவது நிமிஷத்தில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. செல்ஸி அணி 2-ஆவது முறையாக கிளப் உலகக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. முன்பாக 2021-இல் வென்றிருந்தது. பிபா நடத்திய முதல் கிளப் உலகக் கோப்பை இது என்பது குறிப்பிட்டத்தக்கது. சாம்பியன்ஸ் லீக் மற்றும் இந்த உலகக் கோப்பையிலும் ஆதிக்கம் செலுத்தி வந்த பி.எஸ்.ஜி.க்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது செல்ஸி.

______________________________________________________________________________________________

‘ஜனநாயகன்’ போஸ்டர் ரீ-கிரியேட் 

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் வேன் மீது நின்று செல்ஃபி எடுப்பது போன்று வடிவமைத்து வெளியிட்டார்கள். இது நிஜத்தில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பின் போது நடந்தது என்பது நினைவுக் கூரத்தக்கது. ஆனாலும், இந்த ‘ஜனநாயகன்’ போஸ்டருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது ‘ஜனநாயகன்’ போஸ்டர் பாணியில் விம்பிள்டன் நிர்வாகம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற ஜன்னிக் சின்னருக்கு ‘ஜனநாயகன்’ போஸ்டர் பாணியில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். கையில் கோப்பையுடன் ஜன்னிக் சின்னர் செல்ஃபி எடுப்பது போன்று இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை விம்பிள்டன் நிர்வாகம் தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து