முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
பெண்களை விட ஆண்கள் நிறக்குருடர்கள்

இந்த உலகை வண்ண மயமாகவும், அதன் 8 பரிமாணங்களுடனும் காணும் காட்சிதான் உள்ளத்துக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. ஆனால் அறிவியல் உள்ளத்தை பார்க்காது. உண்மையை மட்டும்தான். அப்படி பார்த்த போது ஒரு ஆச்சரியப்படும் செய்தி தெரியவந்தது. அது என்னவென்றால் பெண்களை காட்டிலும் ஆண்கள் சற்றே நிறக்குருடர்கள் என்பதுதான் அது. அதாவது பெண்களை காட்டிலும் நிறங்களை உணர்ந்து கொள்வதில் ஆண்கள் சற்று குறைச்சல்தான். இதற்கு அவர்களது மரபணுவில் காணப்படும் எக்ஸ் குரோமோசோம்தான் காரணம் எனச் சொல்லப்படுகிறது, பெண்களுக்கு 2 எக்ஸ் குரோமோசோம்கள் இருப்பதால் ஒன்றின் குறைபாட்டை மற்றது சரி செய்து விடுமாம். ஆனால் பாவம் ஆண்களுக்கு இருக்கும் ஒரு எக்ஸ் குரோமோசோமும் மக்கர் பண்ணினால், உலகம் கருப்பு  வெள்ளையாகத்தான் தெரியுமாம். என்ன கொடுமை சார் இது..

ஆக்டோபஸ் அதிசயங்கள் : 3 இதயம், 9 மூளை, நீல ரத்தம்

ஆக்டோபஸ் என்ற உயிரனத்தை நாம் அறிவோம். ஆனால் அதன் உடலில் சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை அறிவோமா.. எல்லா உயிரினங்களுக்கும் 1 இதயம்தான் இருக்கும். ஆனால் ஆக்டோபஸ்ஸூக்கு 3 இதயங்கள். அவற்றில் 2 உடலின் செல்களுக்கு ரத்த ஓட்டத்தை சப்ளை செய்ய, மற்றொன்று உடல் உறுப்புகளுக்கு சப்ளை செய்கிறது. ஆக்டோபஸ் நீந்தும் போது இதயம் துடிப்பதில்லை என்பது கூடுதல் சுவாரசியம். அதே போல 9 மூளைகள் உள்ளன. அதில் பிரதானமான மூளை கணிப்பதற்கும், முடிவெடுப்பதற்குமான வேலையை செய்கிறது.  மற்ற 8 மூளைகளும் அதன் ஒவ்வொரு கரங்களுக்கும் அடியில் அமைந்து செயல்பாடுகளை மேற்கொள்கிறது. அதே போல நாம் உள்பட பெரும்பாலான விலங்குகளின் ரத்தம் எல்லாம் சிவப்பாக இருக்கும் போது ஆக்டோபஸ்ஸின் ரத்தம் நீல நிறமானது. நமது ரத்தத்தில் இரும்பை அடிப்படையாகக் கொண்ட ஹீமோகுளோபின் செல்களுக்கு ஆக்ஸிசனை கொண்டு செல்லும் வேலையை செய்கிறது. இதே வேலையை ஆக்டோபஸ்ஸில் காப்பரை அடிப்படையாகக் கொண்ட  கியனோகுளோபின் அந்த வேலையை செய்கிறது.

பறவைகள் தற்கொலை செய்து கொள்ளும் வினோத கிராமம்

வடகிழக்கு மாநிலத்தின் மிகப்பெரிய மாநிலமான அஸ்ஸாம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. ஆனால், இந்த மாநிலத்தின் பல விஷயங்கள் மிகவும் மர்மமானவை. இந்த மாநிலத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பறவைகள் தற்கொலை செய்து கொள்ளும் இடம் உள்ளது. டிமா ஹாசோ மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ள ஜதிங்கா பள்ளத்தாக்கு பறவைகளின் தற்கொலை ஸ்தலமாக அறியப்பட்டு மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில், பறவைகளின் தற்கொலையால் ஜதிங்கா கிராமம் உலகின் வெளிச்சத்திற்கு வருகிறது. உள்ளூர் பறவைகள் மட்டுமின்றி, புலம்பெயர்ந்த பறவைகளும் இங்கு வந்து தற்கொலை செய்துகொள்வதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இது போன்ற சம்பவம் 1901ம் ஆண்டு முதல் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் வெளியுலகம் 1957ல்தான் இதுபற்றி அறிந்தது. இந்த சம்பவம் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் தீர்வு கிடைக்கவில்லை. 

மது தயாரிக்க கற்று தரும் பல்கலைக்கழகம்

மது தயாரிக்க..அதான்ங்க சாராயம் காய்ச்ச கற்றுத் தரும் பல்கலை கழகம் ஒன்று உள்ளது. அது இங்கு அல்ல.. ஆஸ்திரேலியாவில். அங்குதான் ஒரு பல்கலைக்கழகம் இருக்கிறது. அதன் பெயர் 'எடித் கோவன் பல்கலைக்கழகம்'. இந்த பல்கலைக்கழகம் தான் பீர் தயாரிக்க கற்றுத்தருகிறது. நம்மூரில் மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்று எல்லா கட்சிகளும் கூச்சலிடுகின்றன. அங்கு என்னவென்றால் மது தயாரிக்க தனிப் பல்கலைகழகமே வைத்திருக்கிறார்கள். இவர்கள் பீர் தயாரிப்பில் பேச்சுலர் டிகிரியைக் கொடுக்கிறார்கள். மாஸ்டர் டிகிரி வேண்டும் என்பவர்களுக்கு பிரிட்டனில் ஒரு பல்கலைக்கழகம் இருக்கிறது. அதன் பெயர் 'நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம்'. இது பீர் தயாரிப்பில் மாஸ்டர் டிகிரியைக் கொடுக்கிறது. பள்ளியில் உணவு அறிவியல் பாடம் எடுத்தவர்களுக்குதான் இங்கு அனுமதி. படித்து மார்க் எடுத்த பின் செய்முறை பயிற்சி  வகுப்பில் நல்ல பீரை தயாரித்து கொடுக்க வேண்டும். தயாரித்த பீரை கொஞ்ச நாட்கள் அப்படியே விட்டு வைத்து பார்வையிடுகிறார்கள். பீர் நன்றாக இருந்தால் பிராக்டிகலில் முழு மதிப்பெண்களை அள்ளலாம். பீர் தயாரிக்கும் இந்த வகுப்பிலோ பலகலைக்கழக வளாகத்திற்குள்ளோ மாணவர்கள் பீர் குடிக்க அனுமதியில்லை. 

சினிமாவில் முதல் ஃபிளாஸ் பேக்

'ஃபிளாஷ் பேக்' என்பதை சினிமாவின் புரட்சி என்கிறார்கள். இதை சினிமாவில் முதன் முதலாக பயன்படுத்தியவர் அகிரா குரோசோவா என்ற இயக்குனர். அவர் இயக்கிய 'ரோஷோமான்' படத்தில் இந்த நுட்பத்தை பயன்படுத்தினார். இந்தக் கதையை அடிப்படையாக வைத்துதான் தமிழில் சிவாஜி கணேசன் நடிக்க 'அந்த நாள்' என்ற படம் வந்தது. முதன் முதலில் ஃபிளாஷ் பேக்கை பயன்படுத்திய தமிழ் படம் அதுதான்.

விவசாயம் செய்யும் எறும்புகள்

உலகில் மனிதனுக்கு பிறகு தனக்கு தேவையான உணவை தானே விவசாயம் செய்யும் உயிரினம் எது தெரியுமா..அது எறும்புதான்..இந்த எறும்புகள் இலைகளை சின்ன சின்னதாக கத்தரித்து எடுத்து வந்து தனது கூட்டுக்குள் வைத்துவிடும். சில நாட்கள் கழித்து அந்த இலைகளில் ஒருவைகையான பூஞ்சைகள் வளரும். அவற்றை எறும்புகள் உணவாக உண்ணும். இது தான் எறும்புகள் செய்யும் விவசாயம். அந்த இலைகள் காய்ந்த பின் அவற்றை வேலைக்கார எறும்புகள் வெளியே எடுத்து போட்டுவிடும். பிறகு புதிதாக இலைகளை வெட்டி வந்து வைக்கும். அதில் வளரும் பூஞ்சைகளை தான் உண்ணும். இப்படி தனக்கு தேவையான உணவை. தானே விவசாயம் செய்து உண்ணும் உயிரினம் தான் எறும்புகள்.