முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்

செவ்வாய் கிரகத்தில் ஆண்டின் சில நாட்கள் மட்டும் உப்பு நீர் உருவாவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. என்ன மக்களே.. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா.. இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், செவ்வாயின் மேற்பரப்பில் நடுவில் அமர்ந்திருக்கும் ஒரு பாறை குளிர்காலத்தில் நிழலை உருவாக்குகிறது. குளிர்காலத்தில் அந்த நிழல் பகுதியில் பனி குவிகிறது. அதில் சூரிய ஒளி படும்போது ​​பனி திடீரென்று வெப்பமடைகிறது. அதன் விரிவான ஆய்வுகளில், கிரகத்தில் காலையில் மைனஸ் 128 டிகிரி செல்சியஸ் இருந்த வெப்பநிலை மதியத்துக்குள் மைனஸ் 10 டிகிரி செல்சியஸாக மாறுகிறது. இது ஒரு நாளில் சில மணி நேரத்தில் ஏற்படும் மிகப் பெரிய மாறுதலாகும். ஆனால், குறுகிய காலத்தில், உறைபனி அனைத்தும் கரைந்து வளிமண்டலத்திற்கு செல்வதில்லை. இதனால், அப்பகுதியில் இருக்கும் நீரானது உப்பு கரைசலாக இருக்கலாம். ஏனென்றால் உப்பு நிறைந்த தரையில், பனி மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உருகிவிடும். பனி அனைத்தும் திரவமாக அல்லது நீராவியாக மாறும் வரை உப்புநீர் இருக்கிறது. இந்த நிகழ்வு நடந்து முடிந்து, அடுத்த செவ்வாய் ஆண்டில் (687 நாட்கள்), இதே செயல்முறை மீண்டும் நிகழ்கிறது என்கிறது அந்த அறிக்கை. ஆச்சரியமாக உள்ளதல்லவா...

அம்மனுக்கு ரூ.44444444.44 மதிப்பிலான பணமாலை

நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டம் களை கட்டத் தொடங்கியுள்ளது. நவராத்திரி அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் நாடு முழுவதும் அம்மனுக்கான விசேச பூஜைகள், விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதில் தெலங்கானாவில் உள்ள மெகபூப்நகரில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வைபவங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அங்குள்ள ஆரிய வைசிய சங்கத்தினர் சார்பில் அம்மனுக்கு ரூ. 44444444.44 (4 கோடியே 4 லட்சத்து 44 ஆயிரத்து 444 ரூபாய் 44 காசுகள்) மதிப்பிலான பணமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன. அதிலும் குறிப்பாக 500,100,20 ரூபாய் பணத்தாள்கள் மட்டுமே அதில் பயன்படுத்தப்பட்டிருந்தன. தற்போது அந்த படம் நெட்டில் வைரலாகி வருகிறது.

கழுதைகளை காணவில்லை

இன்றைய தலைமுறையினரில் பலர், கழுதைகளை நேரில் பார்க்கும் வாய்ப்பைக்கூட பெற்றிருக்க மாட்டார்கள். தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கழுதை வீட்டு விலங்காக இருந்தது. கழுதை தாவர உண்ணி. இது குதிரை இனத்தைச் சேர்ந்தது. கழுதை, பாலூட்டிகளில் குதிரை, வரிக்குதிரையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். முகத்தில் மூக்கின் அருகே வெண்மையாக இருப்பது இதன் அடையாளங்களில் ஒன்று.  40 ஆண்டுகள் வரைகூட கழுதைகள் உயிர் வாழும். கழுதைகள் தற்போது வெகுவாக அருகி வருகின்றன. 2007 - 2012 காலகட்டத்தில் இந்தியாவில் கழுதைகளின் எண்ணிக்கை 23% வீழ்ச்சி அடைந்தது. 2012 - 2019 ஆண்டுகளில் அது மேலும் 61.23% வீழ்ந்து, இப்போது வெறும் 1,20,000 கழுதைகள் மட்டுமே உள்ளன. இது உலகளாவிய போக்காக உள்ளது. சீனாவில் 1992-இல் ஒரு கோடியே பத்து லட்சம் கழுதைகள் இருந்தன; இப்போது வெறும் 26 லட்சமாகச் சுருங்கி விட்டன.

3Dபிரிண்டர் மூலம் எருது இறைச்சி ஜப்பானிய விஞ்ஞானிகள் அசத்தல்

இன்றைக்கு வெகு வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் 3D பிரிண்டர் துறையும் ஒன்று. ஒரு பொருளை தொழில் நுட்பத்தின் உதவியுடன் அப்படியே ஒட்டு மொத்தமாக உருவாக்க உதவும் கருவியை 3டி பிரிண்டர் என்று சுருக்கமாக சொல்லலாம். இந்த 3டி பிரிண்டர் மூலம் பல்வேறு வளர்ச்சிகள் ஏற்பட்டு வரும் வேளையில் முக்கியமாக ஜப்பானைச் சோ்ந்த ஒசாகா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் செயற்கையாக எருது இறைச்சியை உருவாக்கி அசத்தியுள்ளனர். செயற்கை ரத்தம், தசை, திசு, போன்ற சிக்கலான அமைப்புடன் கூடிய இந்த இறைச்சி உருவாக்கம் ஒரு முன்னோடி கண்டுபிடிப்பாக நிகழ்ந்துள்ளது. Wagyu cows என்று அழைக்கப்படும் பசுமாடுகளின் ஸ்டெம் செல்லிலிருந்து இது போன்ற செயற்கை இறைச்சியை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கை இறைச்சி 5 மீமி அகலம் 10 மிமீ நீளம் கொண்டதாக உள்ளது. இதில் 72 பைபர்களை இணைத்து 42 திசுக்களாக உருமாற்றி, மேலும் 28 கொழுப்பு கொண்ட திசுக்களையும், 2 ரத்த தமனிகளையும் உருவாக்கியுள்ளனர். இவை அப்படியே இயற்கை இறைச்சியை போலவே காட்சியளிக்கின்றன. இது குறித்து இக்குழுவின் தலைவர் டாங் ஹீ கங் கூறுகையில், வாக்யூ மாட்டிறைச்சியின் திசுக்களின் கூட்டமைப்பை வரைபடமாகக் கொண்டு தசைநார்கள், கொழுப்பு மற்றும் ரத்த நாளங்கள் கொண்ட சிக்கலான வடிவமைப்பை 3டி பிரிண்டரை கொண்டு உருவாக்கியுள்ளோம் என்றார். இவ்வகை மாட்டிறைச்சிக்கு உலக சந்தையில் உணவு பிரியர்களிடம் ஏக கிராக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராவணனின் சடலம் எங்கிருக்கு தெரியுமா?

நமக்கு ராமாயணத்தை தெரியும். ராமனையும் ராவணனையும் தெரியும். ராமாயணப் போரில் ராவணன் கொல்லப்பட்டதாக நாம் படித்திருக்கிறோம். பின்னர் சீதையை மீட்டுக் கொண்டு ராமன் அயோத்தி திரும்பினான். அதற்கு பின்னர் ராவணனுக்கு என்ன ஆனது, இலங்கையில் என்ன நடந்தது என்பது பெரும்பாலானோருக்கு தெரியாது. அதன் பின்னர் ராவணின் உடல் வீபிஷணனிடம் ஒப்படைக்கப்பட்டது. வீபிஷணன் தான் பட்டமேற்க உள்ளதால், அந்த உடலை ஒரு பேழையில் வைத்து நாக குல வீரர்களிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் ராவணன் மயக்கத்தில் இருப்பதாக கருதி உடலை பல்வேறு மூலிகை தைலங்களால் பதப்படுத்தி ரக்லா என்னும் காட்டுப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 8 ஆயிரம் அடி உயர குகையில் பாதுகாத்து வந்துள்ளனர். தற்போது அது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த குகையிலிருந்து அரச ஆடை ஆபரணங்களோடு கூடிய ராவணனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு, புகைப்படமும் வெளியாகியுள்ளது. அப்பகுதி தற்போது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் ராமாயணப் போரின் போது 9300 ஆண்டுகளுக்கு முன்பு கிமு 7292 நவம்பர் 15 இல் ராவணன் கொல்லப்பட்டதாகவும் இதன் மூலம் கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு முதல் நோபல் பரிசு

உலகின் மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுக் கொடுத்தவர் கவிஞர் ரவீந்திராத் தாகூர். இவர் 1861 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி தேவேந்திரநாத் தாகூர், சாரதா தம்பதிகளுக்கு கொல்கத்தாவில் பிறந்தார். இளம் பருவத்திலேயே இலக்கியம், ஓவியம், இசை , கவிதை என்று பன்முகத்திறமைக் கொண்டிருந்தார். பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக 1878 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு சென்றவர் அங்குள்ள கல்விமுறையை அறிந்துகொண்டார். அதன்படி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த வங்காளத்தில் 'சாந்தி நிகேதன்' பள்ளியைத் துவங்கினார். இங்கு படித்தவர்தான் புகழ்பெற்ற இந்திய இயக்குநர் சத்யஜித்ரே. ’கீதாஞ்சலி’ கவிதைத் தொகுப்பிற்காக தாகூருக்கு இலக்கியத்திற்காக நோபல் பரிசு கடந்த 1913 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டது. அப்பரிசை வென்ற  முதல் ஆசியர் என்ற பெருமையும் தாகூருக்கு உள்ளது.