முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
சோப்பு எப்போ வந்துச்சு..

நாம் மணக்க மணக்க போட்டு குளிக்கும் சோப் எப்போ வந்துச்சு தெரியுமா...நம் தாத்தா, பாட்டன் காலத்தில் இருந்ததா...ஒரு 100 அல்லது 200 ஆண்டுகள் இருக்குமா.. கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். சோப் கண்டுபிடித்து 2500 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும்.. இதை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் பாபிலோனியர்கள் எனப்படும் தற்போதைய ஈராக்கியர்கள்தான் என்றால் ஆச்சரியம் தானே... பாபிலோனியாவின் கடைசி அரசன் நபோனிதஸ் ஆட்சிக் (கிமு 556-530) காலத்தில் அவனது உத்தரவின் பேரில் அரண்மனை ரசவாதிகள் சாம்பல், விலங்குகளின் கொழுப்பு, எண்ணெய், மெழுகு, உப்பு இவற்றைக் கொண்டு சவர்க்காரம் எனப்படும் சோப்பை தயாரித்தனர். முதலில் தரையையும், பின்னர் ஆடைகள், பாத்திரங்களையும் இறுதியில் குளிப்பதற்கும் பயன்பட்டன. இது வணிகர்கள் கண்ணில் படவே நைசாக சிரியா, ரோம், எகிப்து என மொரோக்கோ வரை பயணித்து சோப் பரவலானது. அது சரி.. அதற்கு சோப் என யார் பெயர் வைத்தார்.. கிபி 79 இல் ரோமானிய எழுத்தாளர் பிளினி தி எல்டர் என்பவர் சோப்பை குறிப்பிடும் மூலச் சொல்லான sapo என்று குறிப்பிடுவதற்கு பதிலாக தவறுதலாக soap என குறிப்பிட்டு விட்டார். அதுவே இன்று வரை சோப்பாக நிலைத்து விட்டது.. என்ன ஓகேவா..

தேங்காய் துருவுவது ஈஸி...

சமையல் செய்யும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தெரியும்.. எது கடினமானது என்றால்... தேங்காயை உடைத்து சில்லை எடுத்து மிக்ஸியில் போட்டு துருவுவது.. அல்லது கேரட் சீவலால் சீவி.. மிக்ஸியில் போட்டு அரைப்பது.. தண்ணீர் ஊற்றவில்லை என்றால் மிக்ஸியில் தேங்காய் சரியாக அரையாது.. இதனால் துருவல் பதத்துக்கு எடுக்க முடியாது.. இனி அந்த கவலை எல்லாம் வேண்டாம்.. சந்தைக்கு வந்துள்ளது table top wet grinder coconut scraper அது என்னங்க.. புதுசா இருக்கு.. அதான்... கிரைண்டரில் பொருத்தி தேங்காயை துருவும் கருவி.. டேபிள் டாப் கிரைண்டரில் அதை பொருத்த வேண்டியது..தேங்காய் மூடியை வைத்து.. சுவிட்சை இயக்கினால்.. பூ மாதிரி தேங்காய் துருவல் ரெடி.. என்ன இல்லத்தரசிகளே.. இல்லத்தரசர்களே.. தேங்காய் துருவ ரெடியா... அனைத்து ஆன்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கிறது..பாருங்க.. வாங்குங்க.. ஜாலியா துருவுங்க... இந்த பண்டிகை காலத்தில் தேங்காய் பர்பி செய்து உண்டு மகிழுங்கள்..

வேறு மொழி.

ஒருவர் பேசும் போது குரலின் ஒலியை வைத்து பேசுபவர் ஆணா அல்லது பெண்ணா என்பதை கூறிவிட முடியும். ஆனால் ஒருவர் பேசிய மொழியை வைத்து இதை பேசியவர் ஆணா, பெண்ணா எனக் கூற முடியுமா.. ஆனால் அப்படி ஒரு விநோதமான இடம் நைஜிரீயாவில்  உள்ளது. இங்குள்ள சிறுவர்களும் சிறுமிகளும் ஒரே இடத்தில் வளர்ந்தாலும் இரு வேறு பாஷையையே பேசுகின்றனர். நைஜிரீயாவில் உள்ள உபாங் என்ற கிராமம் தான் அந்த அதிசய மொழி பேசும் கிராமம். எனவே சொற்களை கொண்டே இதை பேசியது ஆணா, பெண்ணா என்பதை சொல்லிவிடலாம் என்றால் ஆச்சரியம் தானே.. உதாரணமாக தண்ணீரை ஆண்கள் பாமுயி என்றால் பெண்கள் அமு என்கின்றனர். இந்த மரபு எப்போதிலிருந்து தொடங்கியது என யாருக்கும் தெரியவில்லை. எனவே ஆண்களின் முன்னால் பெண்கள் தைரியமாக ரகசியங்களை பரிமாறிக் கொள்ளலாம் என்கிறீர்களா.. அதுவும் சரிதான்... மாறி வரும் காலச்சூழலில் ஆங்கில கலப்பால் உபாங் மொழி அழியும் நிலையில் இருப்பதாக சொல்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்..

உலகின் முதல் பல்கலை கழகம்

உலகின் முதல் பல்கலை கழகம் பண்டைய இந்தியாவில் அமைக்கப்பட்டது  என்பது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும். அதன் பெயர் தக்சஸீலா. பரதன் தனது மகன் தட்சனுக்காக நிர்மாணிக்கப்பட்ட நகரம் தக்சஸீலம் என்று சொல்லப்படுகிறது. தட்சஸீல பல்கலை கழகத்தின் காலம் கிமு 6 லிருந்து 7 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அர்த்த சாஸ்திரம் என்ற அரசியல் நூலை எழுதிய சாணக்கியர் இங்கு பேராசிரியராக பணியாற்றினார். அவரிடம் மெளரிய அரசர் சந்திர குப்தர் கல்வி பயின்றார். மற்றொரு புகழ் பெற்ற பேராசிரியர் சமஸ்கிருத அறிஞரான பாணினி. அசோகர் காலத்தில் இது மேலும் விரிவாக்கம் பெற்றது. காலப்போக்கில் பல்வேறு படையெடுப்புகள், ஆட்சிமாற்றங்கள் காரணமாக தட்சஸீலம் படிப்படியாக அழிந்தது.  அது சரி தற்போது அந்த இடம் எங்கே இருக்கிறது என்கிறீர்களா..பாகிஸ்தானில். பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பல்லி புதுசு

பெருவில் புதிய பல்லி இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக அதன் தேசிய பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய பல்லி இனம் லியோலேமஸ் வார்ஜண்டே(Liolaemus warjantay) என்ற விலங்கியல் பெயரால் அழைக்கப்படுகிறது. இது அந்நாட்டு மலையான பெருவியன் ஆண்டிஸில் 4,500 மீட்டர் அதாவது 14,700 அடி உயரத்தில் வாழ்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. பெருவின் அரேக்விபாவில் உள்ள கோட்டாஹுவாசி பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய வகை பல்லியான லியோலெமஸ் வர்ஜண்டே, லியோலெமஸ் இனத்தைச் சேர்ந்தவை. இதில் 280 க்கும் மேற்பட்ட வெவ்வேறு இனப் பிரிவுகள் உள்ளன. இப்பல்லி கண்டுபிடிக்கப்பட்ட பகுதி 4, 90,550 ஹெக்டேர் பரப்பளவிலான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை கொண்டதாகும்.. பல்லிக்கு பின்னால் இத்தனை பெரிய விஷயமா... அடேங்கப்பா..

இளஞ்சிவப்பு ஏரி

ஆஸ்திரேலியாவின் மிகவும் புகழ்பெற்ற ஹில்லியர் ஏரி (Lake Hillier) இளஞ்சிவப்பு ஏரி எனப்படுகிறது. 1802 ஆம் ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியாவின் ரெச்செர்ச் தீவுக் கூட்டத்தின் 105 தீவுகளில் ராயல் நேவி எக்ஸ்ப்ளோரரால் இது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் உள்ள கோல்ட் ஃபீல்ட்ஸ் எஸ்பெரன்ஸ் பகுதியில் இது அமைந்துள்ளது. இந்த ஏரியின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் ஆண்டு முழுவதும் காணப்படும் அதன் இளஞ்சிவப்பு நிறம். அதற்கு என்ன காரணம்...இந்த ஏரியில் டுனாலியெல்லா சலினா என்று அழைக்கப்படும் உப்பு பாசி இனங்கள் மற்றும் ஹாலோபாக்டீரியா எனப்படும் இளஞ்சிவப்பு பாக்டீரியாக்கள், சிவப்பு ஆல்கா உள்ளிட்ட நுண்ணுயிரிகள் உள்ளன. அதுதான் காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதன் நீரை பாட்டிலில் பிடித்தாலும் சிகப்பு நிறத்திலேயே காணப்படுமாம். ஆண்டு முழுவதும் ஏன் இந்த நிறம் தொடர்ந்து மாறாமல் இருக்கிறது என்பதற்கு நிரூபிக்கப்பட்ட அறிவியல் விளக்கம் இதுவரை எதுவும் இல்லை. பிங்க் ஹில்லியர் இன்னும் அறிவியலுக்கு ஒரு மர்மமாகவே உள்ளது. ஆச்சரியமாக உள்ளது அல்லவா..