முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
காலணிகளின் விலை ரூ.37.75 லட்சம்

எவ்வளவு விலை உயர்ந்த காலணியாக  இருந்தாலும், அல்லது ஷூவாக இருந்த போதிலும் அதிகபட்சமாக சில ஆயிரங்கள் இருக்கக் கூடும். ஆனால் பல லட்சத்துக்கு காலணிகள் விற்றது என்றால் அதில் என்ன சிறப்பு இருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா...நைக் நிறுவனம் தயாரித்துள்ள அந்த ஷூவானது 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் மராத்தான் போட்டியில் பங்கேற்றது என்ற பெருமையை பெற்றதாகும். இதையடுத்து இந்த  ஒரு ஜோடி காலணிகள் இந்திய மதிப்பில் ரூ.37.75 லட்சம் தொகைக்கு விற்பனையாகி உலக பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

செல்போனை கண்டுபிடித்தவர் யார் தெரியுமா

தொலைபேசியை கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்றைக்கு அனைவரின் கைகளிலும் தவழும் செல்போனை கண்டுபிடித்தவர்கள் யார் தெரியுமா...மோட்டரோலா நிறுவனத்தின் ஜான் எப் மிட்சல், மார்ட்டின் கூப்பர் ஆகிய இருவரும் சேர்ந்து முதல் கம்பி்யில்லா ரேடியோ ஒலி அலைகள் மூலம் செயல்படும் செல்போனை 1973ம் ஆண்டு தயாரித்தனர். அதன்மூலம் கம்பியில்லா செல்போன் தொழில் நுட்பத்துக்கு வழிவகுத்தனர். அவர்கள் பயன்படுத்திய செல்போன் 2 கிலோ எடையுடன் இருந்தது. பின்னர் 1983 முதல் எடை குறைவான செல்போன்கள் விற்பனைக்கு வரத்தொடங்கின.

இந்த மரம் ரொம்ப காஸ்டலி

தங்கம், பிளாட்டினம், வைரம் போன்ற உலகின் அரிய வகை தனிமங்கள் தான் உலகின் விலைமதிப்பு மிக்கது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அதை இன்றோடு மறந்துவிடுங்கள். இந்த நகைகளை காட்டிலும் விலைமதிப்பற்ற மரம் ஒன்று இருக்கிறது. அந்த மரத்தின் பெயர் அகர் மரம். அதன் விலை கிலோ ரூ.75 லட்சம். அக்குலேரியா என்ற மரத்தின் ஒருவகைதான் இந்த அகர் மரம். இந்த மரத்துக்கு வேறுசில பெயர்களும் உண்டு. அவை கற்றாழை மரம் அல்லது கழுகு மரம். ஜப்பானில் கியாரா அல்லது கயனம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியா, ஜப்பான், அரேபியா, சீனா, மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் போன்றவற்றில் அதிக அளவு காணப்படுகிறது. இந்த மரமே உலகின் மிக அரிதான விலைமதிப்புமிக்க ஒரு மரமாகும்.இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் பிசின் மூலம் ஒருவகை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் வாசனை திரவியங்களின் தயாரிப்பில் அத்தியாவசியமான பொருளாக உள்ளது. தற்போதைய நிலையில் இந்த எண்ணெய் ஒரு கிலோ 25 லட்ச ரூபாய் ஆகும். அப்படி என்றால் இந்த மரம் தானே உலகிலேயே மிகவும் காஸ்ட்லி.

இந்த உயிரிக்கு ஆக்சிஸன் வேண்டாம்

விஞ்ஞானத்தில் எப்போதும் புதுமைகள் சாத்தியம் தான். அண்மையில் இஸ்ரேல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள உயிரினம் ஆக்சிஸன் அதாவது பிராண வாயு இல்லாமலேயே உயிர் வாழக்கூடியது. இது அறிவியலில் அதிசயம். சால்மன் மீன்களின் தசையில் வாழக்கூடிய உயிரினம் இது. 10 உயிரணுக்களுக்கும் குறைவாகக் கொண்ட இந்த ஒட்டுண்ணிக்கு ஹென்னிகுயா சால்மினிகோலா என்று பெயரிடப்பட்டுள்ளது.ஜெல்லிமீன் மற்றும் பவளப்பாறை இனத்தை சேர்ந்த உயிரினமாக இந்த ஒட்டுண்ணி கருதப்படுகிறது. இவை பிராணவாயுவை உள்வாங்குவதும் இல்லை, மூச்சுவிடுவதும் இல்லை. பரிணாம வளர்ச்சியில் புதிய திசையை காட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் வியக்கின்றனர். அவர்களோடு சேர்ந்து நாமும் வியப்போம்.. என்ன ஓகேவா..

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்

செவ்வாய் கிரகத்தில் ஆண்டின் சில நாட்கள் மட்டும் உப்பு நீர் உருவாவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. என்ன மக்களே.. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா.. இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், செவ்வாயின் மேற்பரப்பில் நடுவில் அமர்ந்திருக்கும் ஒரு பாறை குளிர்காலத்தில் நிழலை உருவாக்குகிறது. குளிர்காலத்தில் அந்த நிழல் பகுதியில் பனி குவிகிறது. அதில் சூரிய ஒளி படும்போது ​​பனி திடீரென்று வெப்பமடைகிறது. அதன் விரிவான ஆய்வுகளில், கிரகத்தில் காலையில் மைனஸ் 128 டிகிரி செல்சியஸ் இருந்த வெப்பநிலை மதியத்துக்குள் மைனஸ் 10 டிகிரி செல்சியஸாக மாறுகிறது. இது ஒரு நாளில் சில மணி நேரத்தில் ஏற்படும் மிகப் பெரிய மாறுதலாகும். ஆனால், குறுகிய காலத்தில், உறைபனி அனைத்தும் கரைந்து வளிமண்டலத்திற்கு செல்வதில்லை. இதனால், அப்பகுதியில் இருக்கும் நீரானது உப்பு கரைசலாக இருக்கலாம். ஏனென்றால் உப்பு நிறைந்த தரையில், பனி மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உருகிவிடும். பனி அனைத்தும் திரவமாக அல்லது நீராவியாக மாறும் வரை உப்புநீர் இருக்கிறது. இந்த நிகழ்வு நடந்து முடிந்து, அடுத்த செவ்வாய் ஆண்டில் (687 நாட்கள்), இதே செயல்முறை மீண்டும் நிகழ்கிறது என்கிறது அந்த அறிக்கை. ஆச்சரியமாக உள்ளதல்லவா...

அம்மனுக்கு ரூ.44444444.44 மதிப்பிலான பணமாலை

நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டம் களை கட்டத் தொடங்கியுள்ளது. நவராத்திரி அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் நாடு முழுவதும் அம்மனுக்கான விசேச பூஜைகள், விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதில் தெலங்கானாவில் உள்ள மெகபூப்நகரில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வைபவங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அங்குள்ள ஆரிய வைசிய சங்கத்தினர் சார்பில் அம்மனுக்கு ரூ. 44444444.44 (4 கோடியே 4 லட்சத்து 44 ஆயிரத்து 444 ரூபாய் 44 காசுகள்) மதிப்பிலான பணமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன. அதிலும் குறிப்பாக 500,100,20 ரூபாய் பணத்தாள்கள் மட்டுமே அதில் பயன்படுத்தப்பட்டிருந்தன. தற்போது அந்த படம் நெட்டில் வைரலாகி வருகிறது.