மின்வெட்டு நேரம் அதிகரிப்பு பொது மக்கள் கடும் எதிர்ப்பு

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      தமிழகம்

திருமங்கலம், பிப்.19- திருமங்கலம் நகரில் மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டிருப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு. 

முதல் கோணல் முற்றும் கோணல் என்ற வழக்கச்சொல்லின்படி உருப்படியான மின்திட்டங்கள் எதையும் தி.மு.க. அரசு செயல்படாததால் தமிழகத்தில் மின்பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் அறிவிக்கப்பட்ட மின்தடை, அறிவிக்கப்படாத மின்தடை அமல்படுத்தப்பட்டதால் பொதுமக்கள் வணிக, வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு கடுமையாந பாதிப்பு ஏற்பட்டது. மத்திய அரசின் மின்தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரம் பெற ஆளும் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காததால் தமிழகம் இருளில் மூழ்கி கிடக்கிறது.  

இந்நிலையில் மதுரைமாவட்டம் திருமங்கலம் நகரில் மின்பற்றாக்குறையை கருத்தில்கொண்டு காலை 6 மணி முதல் 8 மணிவரை இரண்டு மணி நேர அறிவிக்கப்பட்ட மின்தடையும், அடிக்கடி அறிவிக்கப்படாத மின்தடையும் ஏற்பட்டு வந்தது. இதனிடையே மதுரை மாவட்டத்திற்கு ஒதுக்கப்படும் மின்சாரத்தில் 70 மெஹாவாட் தட்டுப்பாடு ஏற்பட்டதால், மேலும் ஒரு மணி நேர அறிவிக்கப்பட்ட மின்தடையை நீட்டிப்பு செய்து தர மின்வாரியம் முடிவு செய்தது. அதன்படி காலை 6 மணிக்கு துவங்கி 8 மணிக்கு முடிந்திடும் மின்தடை தற்போது ஒரு மணி நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டு காலை 9 மணிவரை தொடர்கிறது. 

மதுரை நகர் மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட பல முக்கிய  நகர்ப் பகுதிகளில் ஏற்கனவே 2 மணிநேரம்  அறிவிக்கப்பட்ட மின்தடை இருந்துவந்தது. தற்போது அது நீட்டிக்கப்பட்டு 3 மணி நேரமாக இருந்துவருகிறது. இந்த அறிவிக்கப்பட்ட மின்வெட்டு 4 மணிநேரமாகவும் சில பகுதிகளில் இருக்கிறது.  அறிவிக்கப்பட்ட மின்வெட்டே இப்படி உயர்ந்துவரும் பொழுது, அறிவிக்கப்படாத மின்வெட்டு எவ்வளவு நேரம் நீடிக்கப்போகிறதோ தெரியவில்லை.

இதனால் வீட்டுவேலைகள் செய்திட முடியாமல் தாய்மார்களும், பள்ளிக்கு கொண்டுசெல்லும் உணவு தயாராகாததால் பள்ளி குழந்தைகளும், அலுவலகம் செல்பவர்களும், வணிக, வர்த்தக நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் மற்றும் சிறுதொழில்செய்வோர் என அனைத்து தரப்பினரும் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த மின்தட்டுப்பாட்டை தவிர்க்க மத்திய அரசுடன் மாநில தி.மு.க. அரசு பேச்சுவார்த்தை நடத்தி, மத்திய தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரம் பெற்று மின்பற்றாக்குறையை தீர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மின்பற்றாக்குறை, மின்தட்டுப்பாடு பிரச்சனைகள் தேர்தல் சமயத்தில் தி.மு.க. கூட்டணியை வீழ்த்திடும் முக்கிய ஆயுதங்களாக மாறிவிடும் என்பதே அனைத்து தரப்பினரது எச்சரிக்கையாக உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: