மும்பை தாக்குதல் - மும்பை ஐகோர்ட்டு இன்று முக்கிய தீர்ப்பு

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      இந்தியா

 

மும்பை, பிப்.21-மும்பை தாக்குதல் குற்றவாளி கசாப் தூக்கு தண்டனை உறுதி செய்யப்படுமா?மும்பை ஐகோர்ட்டு இன்று முக்கிய தீர்ப்பு.

மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான கசாப்பின் தூக்கு தண்டனை உறுதி  செய்யப்படுமா? என்பது குறித்த முக்கிய தீர்ப்பு இன்று மும்பை ஐகோர்ட்டில் வெளியாக இருக்கிறது.

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி மும்பையில் பல முக்கிய இடங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10  பேர் நடத்திய தாக்குதலில் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்  சம்பவத்தில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அஜ்மல்  கசாப் என்ற ஒரே ஒரு தீவிரவாதி மட்டும் உயிரோடு பிடிபட்டான். அவன் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு  செய்தனர். இந்த வழக்கில் மும்பை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு கசாப்புக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

இந்த தண்டனையை எதிர்த்து கசாப் மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தான். இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை அனைத்தும் முடிவடைந்து விட்டன.

எனவே இந்த மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட்டு நீதிபதிகள் ரஞ்சனா தேசாய், ஆர்.வி.மோரே ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்  இன்று வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை தாக்குதல் வழக்கில் தாக்குதல் சம்பவத்திற்கு துணையாக இருந்த இரு இந்தியர்களை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விடுதலை  செய்திருந்தது. இந்த விடுதலையை எதிர்த்து இதே மும்பை ஐகோர்ட்டில் இதே நீதிபதிகளை கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்பு மகாராஷ்டிர அரசு மேல் முறையீடு செய்திருந்தது. இந்த மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பும் இன்று வெளியிடப்படுகிறது.

கசாப்பின் தூக்கு தண்டனை உறுதி  செய்யப்பட்டால் அவனுக்கு விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: