மீனவர்களை உடனே விடுதலை செய்ய திருமாவளவன் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      அரசியல்

 

சென்னை, பிப்.19-

சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனே விடுதலை செய்ய திருமாவளவன் வலியுறுத்தல்.

இலங்கையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மத்திய  அரசு எடுக்க வேண்டும் என தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதை கண்டித்து சென்னையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் கலைக்கோட்டுதயம், பொருளாளர் முகமது யூசுப், மாநில செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, கோட்டைக்காடு ஏ.துரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:

இலங்கையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கும், சிறை பிடிக்கப்படுவதற்கும் இலங்கை அரசு மட்டும் பொறுப்பல்ல, இந்திய அரசும் இதற்கு பொறுப்பாகும். 

இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும். இலங்கையில் தனி ஈழம் அமைந்துவிடக்கூடாது என்பது தான் இந்திய வெளியுறவுத்துறையின் கொள்கையாகும். இந்த கொள்கை உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாறாதவரையில் தமிழனுக்கு பாதுகாப்பு கிடையாது. உடனடியாக வெளியுறவுக்கொள்கையில் மாற்றம் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

தமிழக மீனவர்களை இலங்கை அரசு சிறைபிடிப்பது ஒரு புறம் இருந்தாலும், அங்குள்ள மீனவர்களே  தமிழக மீனவர்களை  பிடித்து இலங்கை கடற்படையிடம் ஒப்படைப்பது போல செய்திகள் வருகிறது. ஆனால், உண்மையில் இது இலங்கை அரசு திட்டமிட்டு செய்யும் சதிச்செயலாகும். இரண்டு நாட்டு மீனவர்களுக்கு இடையே மோதலை உருவாக்க முயற்சிக்கிறது. 

ஏனெனில், இன்னும் இலங்கை அரசு தமிழீழம் அங்கு அமைந்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறது. இலங்கை அரசு தமிழீழம் அமைக்க முன்வந்து, மண்ணை பிரித்துத்தர முன்வந்தாலும், இந்திய அரசு இது அமைந்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறது.

எனவே, தான் கூறுகிறோம் இந்திய அரசின் வெளியுறவுத்துறை கொள்கையில் மாற்றம் தேவை என்று வலியுறுத்துகிறோம். 

சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழக மீனவர்களுக்கு சொந்தமான கச்சத்தீவை மீட்க வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும். இவ்வாறு தொல்.திருமாவளவன் பேசினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: