முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாலத்தீவில் தேர்தல் தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும்

ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

மாலே, பிப். - 20 - மாலத்தீவில் தேர்தல் தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் வலியுறுத்தி உள்ளார்.  அரசியல் நெருக்கடி காரணமாக சமீபத்தில் அதிபர் பதவியை இழந்த அவர், இப்போதைய அதிபர் முகமது வாஹீத் ஹசன் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். அரசுக்கு எதிராக நஷீத்தின் ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக நஷீத் பதவி விலகிய போது ஏற்பட்ட வன்முறையால் மாலத்தீவில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதனை நீக்க இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டன. இதனால் அங்கு பதட்டம் சற்று தணிந்தது. இந்திய வெளியுறவு செயலர் ரஞ்சன் மத்தாய், முன்னாள் அதிபர் நஷீத்தையும், இப்போதைய அதிபர் ஹசனையும் சந்தித்து பேசினார்.  இந்நிலையில் நஷீத் பதவி விலகிய சூழ்நிலை குறித்து ஆராய காமன்வெல்த் நாடுகளின் அமைச்சர்கள் குழு மாலத்தீவுக்கு வந்தது. இதனிடையே தன்னிடம் உறுதியளிக்கப்பட்டபடி மாலத்தீவில் தேர்தல் நடத்தப்படும் தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று நஷீத் வலியுறுத்தி உள்ளார். தங்கள் கட்சியினர் நடத்தும் போராட்டம் இப்போதைக்கு ஓயாது என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக நெருக்கடி நிலையை போக்க மாலத்தீவில் மீண்டும் தேர்தல் நடத்துவது என்று பல்வேறு கட்சிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பின் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவில் இந்திய வெளியுறவு செயலர் ரஞ்சன் மத்தாயும் முக்கிய பங்கு வகித்தார். தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. மாலத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையை தீர்க்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் விக்டோரியா நியூலேன்ட் கூறும் போது, மாலத்தீவில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்க்க பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளதை வரவேற்கிறோம். ஒருங்கிணைந்த அரசு அமைய பேச்சு நடத்தப்படுவது நல்ல முயற்சி. அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பேசி பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். இது விஷயத்தில் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா இந்தியா இடையே சிறப்பான ஒத்துழைப்பு எப்போதும் இருந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்