முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கே.என்.நேரு மீது 8 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி.பிப்.21 ​- கடந்த 1989முதல் 1991 வரையிலும், 1996 முதல் 2001வரையிலும் 2006முதல் 2011வரையிலும் நடந்த திமுக ஆட்சி காலத்தில் மின்சாரத்துறை, பால்வளத்துறை,தொழிலாளர் நலத்துறை, செய்தித்துறை, உணவுத்துறை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் கே.என்.நேரு. இவர் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள காணக்கிளியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர். முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது நில அபகரிப்பு புகார், வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்த வழக்கு, திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்திய புகார், தஞ்சையில் பெண்ணை மீரட்டி ஓட்டலை எழுதியவாங்கிய புகார் ஆகிய புகார்கள் மீது ஏற்கெனவே வழக்குகள் உள்ளது. மேலும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயம் கட்டியது தொடர்பாக திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த டாக்டர் கதிர்வேல் என்பவருக்கு சொந்தமான நிலத்தை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட திமுகவினர் அபகரித்தது தொடர்பாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே கடந்த திமுக ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சர் நேரு வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்தது தொடர்பாக திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து கே.என்.நேருவுக்கு சொந்தமான பங்களாக்கள், அலுவலகங்கள் அவரது சகோதரரான திருச்சியை சேர்ந்த தொழில் அதிபர் கே.என்.ராமஜெயம், மற்றும் இரண்டு சகோதரர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்கெனவே அதிரடி சோதனையிட்டனர். 

இந்த நிலையில் கே.என்.நேருவின் கடைசி மகன் அருண் நேருவிற்கு திருச்சி அடுத்த அம்மாபேட்டையில் உள்ள நேருவின் சொந்த பொறியியல் கல்லூரியான கேர் பொறியியல் கல்லூரியில் திருமணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது. இந்த திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். 

இதற்கிடையே திருவாரூர் மாவட்டம் குத்தாலம் திமுக முன்னாள் எம்.எல்.ஏ கல்யாணம் என்ற கல்யாணசுந்தரம் திருட்டு தனமாக மணல் எடுத்து விற்றது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை திருச்சி சிறையில் சந்திப்பதற்காக முன்னாள் அமைச்சர் நேரு, திருச்சி மாநகர திமுக செயலாளர் அன்பழகன், திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் ண்டி கலைவாணன், அவரது உதவியாளர் செல்வராஜ், ஆகியோர் நேற்று காலை ஒரு காரில் வந்தனர். அவரது வருகைக்கு முன்பாக ஏராளமான திமுகவினர் சிறை வாசல் முன்பு காத்திருந்தனர். 

இதற்கிடையே முன்னாள் அமைச்சர் நேரு, மற்றும் திமுகவினர் வந்த க காரை சிறைக்காவலர்கள் தடுத்து நிறுத்தி நடந்து செல்லுமாறு கூறினார்கள். அதற்கு கே.என்.நேரு நாங்கள் ஏற்கெனவே சிறைத்துறை அதிகாரியிடம் தகவல் தெரிவித்து விட்டு வந்திருக்கிறோம் எனவே எங்களது காரை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்கள். 

அதற்கு சிறைக்காவலர் வீரமணி என்பவர் சிறைத்துறை அதிகாரிகளிடம் பேசிவிட்டு உங்களது காரை அனுமதிக்கின்றோம் என்று தெரிவித்தார். பின்னர் சிறைக்காவலர்களுக்கும் நேரு மற்றும் அவருடன் வந்திருந்தவர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சிறைக்காவலர்களை திமுகவினர் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் நேருவுடன் வந்திருந்த ஆதரவாளர்கள் சிறைக்காவலர்களிடம் தகராறு செய்யதாக கூறப்படுகிறது. பின்னர் அனுமதியின்றி கே.என்.நேரு காரில் உள்ளே சென்றதாக தெரிகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறைக்குள் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ கல்யாணத்தை அவர்கள் சந்தித்து விட்டு சென்று விட்டனர். இதனால் சுமார் 1 மணிநேரம் திருச்சி மத்திய சிறைச்சாலைக்குள் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த சம்பவத்தை தொடர்ந்து சிறைக்காவலர் வீரமணி என்பவர் திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் நேரு, திருச்சி மாநகர செயலாளர் அன்பழகன், திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் ண்டி கலைவாணன், அவரது உதவியாளர் செல்வராஜ் மற்றும் அடையாளம் தெரியாத திமுகவினர் மீது 147, 148, 299, 294(பி), 307, 332, 353, 506(1), ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தல், சட்டவிரோதமாக கூடுதல், கெட்ட வார்த்தைகளால் திட்டுதல், தகராறு செய்தல், கொலை முயற்சி செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து நேற்று மாலை கே.என்.நேரு உள்ளிட்ட சிலரை திருச்சி மாநகர போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதையடுத்து திருச்சி தில்லைநகர் 5வது கிராசில் உள்ள மாவட்ட திமுக அலுவலகம், திருச்சி 11வது கிராசில் உள்ள கே.என்.நேருவின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் திமுகவினரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவலை அறிந்ததும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, போலீசார் கைது செய்யக்கூடும் என கருதி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் திருச்சி மாநகர போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்