முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லையில் ராமதாஸ் கொடும்பாவி எரிப்பு

திங்கட்கிழமை, 21 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

 

நெல்லை மார்ச்-22 - பாட்டாளி மக்கள் கட்சியில் இஸ்லாமியர்களுக்கு தேர்தலில் போட்டியிட ஒரு இடங்கூட வழங்காததை கண்டித்து நெல்லையில் டாக்டர் ராமதாஸ் கொடும்பாவியை எரிக்க முயன்ற பாட்டாளி மக்கள் கட்சியினர் 12 பேர் கைது செய்யப்பட்டனர். பாட்டாளி மக்கள் கட்சியில் இஸ்லாமியர்கள் போட்டியிட ஒரு இடங்கூட ஒதுக்கப்படாததை கண்டித்து நெல்லை தூத்துக்குடி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். உச்சக்கட்டமாக அவர்கள் அக்கட்சித்தலைவர் ராமதாஸ் கொடும்பாவியை எரிக்கமுயன்ற சம்பவம் நெல்லையில் கூட்டணி கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. , தி.மு.க.தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 30 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் ஒரு இடம் கூட இஸ்லாமியருக்கு வழங்கப்படவில்லை என்பதே அக்கட்சியினரிடையே எழுந்துள்ள குற்றச்சாட்டு. 

இது குறித்து நெல்லை மாவட்டம் மானூர் ஒன்றிய செயலாளர் ஜெய்லானி தெரிவித்ததாவது: தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.விற்கு 30 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் ஒரு இடம் கூட இஸ்லாமியர்களுக்கு ஒதுக்கப்படவில்லை. கூட்டணியில் 10 இடங்கள் ஒதுக்கப்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் கூட ஒரு இடத்தை இஸ்லாமியருக்கு ஒதுக்கியுள்ளது. பா.ம.க.வின் தென்மாவட்ட வளர்ச்சிக்காக மிகவும் பாடுபட்டவர் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வரும் கசாலி. இவர் கட்சி வளர்ச்சிக்காக சென்னை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாநாடுகளை நடத்தியதோடு தென்மாவட்டங்களில் கட்சி வளர்ச்சி பணிகளுக்காக தன்சொந்த நிதியை செலவு செய்தவர். கட்சி தலைமை அவருக்கு தேர்தலில் போட்டியிட சீட் ஒதுக்குவதாகவும் திண்டுக்கல், பாளையங்கோட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாகவும் அறிவித்திருந்து. ஆனால் அறிவித்தபடி அவருக்கு தேர்தலில் நிற்க இடம் ஒதுக்கபடவில்லை.

இது கட்சியில் உள்ள இஸ்லாமியரை மிகவும் புண்படுத்தியுள்ளது. பா.ம.க.வும் ராமதாஸும் இஸ்லாமியருக்கு துரோகம் செய்துவிட்டது. எனவே கட்சியில் இஸ்லாமியருக்கு துரோகம் செய்த ராமதாஸின் கொடும்பாவியை எரிப்போம் என்று தெரிவித்தார். அறிவித்தபடியே நேற்று மாலை ஒன்றிய செயலாளர் ஜெய்லானி தலைமையில் அக்கட்சியினர் நெல்லை மாவட்டம் மானூர் அருகேயுள்ள தென்கலம் பகுதியில் ராமதாஸின் கொடும்பாவியை எரிக்க முயன்றனர். இதனையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொடும்பாவி எரிப்பதை தடுத்ததோடு கொடும்பாவியை எரிக்க முயன்ற ஒன்றிய செயலாளர் ஜெய்லானி, காயிதே மில்லத் அறக்கட்டளை தலைவர் பீர்முகமது, நெல்லை மாவட்ட துணைத்தலைவர் அலாவுதீன், பாளை பகுதி செயலாளர் மின்னல் ஜாகீர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் செங்கோட்டை பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட துணைச்செயலாளர் தோணி அப்துல் காதர், கருங்குளம் ஒன்றியத்தலைவர் முருகன், மற்றும் நிர்வாகிகள் பண்டாரம். அறிவழகன், திருவரங்கம் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். 

இப்படி பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளே கட்சித்தலைவர் ராமதாஸுக்கெதிராக போர்க்கொடி தூக்கியுள்ள விவகாரம் நெல்லை மாவட்டத்தில் கூட்டணி கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony