முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

ராமேஸ்வரம், பிப்.- 27 - நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 22 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் அவர்களது 5 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.  பாரம்பரியமாக இந்தியா, இலங்கை கடல் பகுதிகளில் தமிழக மீனவர்கள்  மீன்பிடித்து வந்தனர். ஆனால்  விடுதலைப் புலிகள் உடனான போரையடுத்து இலங்கை கடற்படையினர் பாதுகாப்பை காரணமாக காட்டி தமிழக மீனவர்களை நிம்மதியாக மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றும், அவர்களின் மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தியும், கஷ்டப்பட்டு பிடித்த மீன்களை அபகரித்தும் வருகின்றனர். இலங்கை கடற்படையினரின் இத்தகைய அத்துமீறிய நடவடிக்கைகளை தடுத்து நிறத்தக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு பலமுறை கடிதங்களை எழுதியும் இதுவரை பலனேதும் ஏற்படவில்லை. இந்நிகழ்வுகள் தொடர்ந்து  நடைபெற்று வருகின்றன.  இந்த நிலையில் ராமேஸ்வரம் தங்கச்சிமடம், உச்சிப்புளி பகுதிகளில் இருந்து கடந்த பிப்ரவரி 25 ம் தேதி 800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இந்த மீனவர்கள்  நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 போர்க் கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர். பின்னர் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், உச்சிப்புளியைச் சேர்ந்த ஜெயசிங், இருளாண்டி, ஜீவன்சன், சகாயம், பொன்னுச்சாமி ஆகியோருக்கு சொந்தமான 5 விசைப்படகுகளை மடக்கிப் பிடித்தனர். பின்னர் இந்த விசைப்படகுகளையும் அதில் இருந்த மீனவர்கள் 22 பேரையும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டுசென்றதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர். பின்னர் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 22 பேரும் மன்னார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த மீனவர்கள் மீது எல்லைதாண்டி வந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதி மீனவர்கள் 22 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று மீனவர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்